மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 4 டிரில்லியன் டாலர் என்ற அளவை முதல் முறையாக எட்டி நம் நாட்டின் பொருளாதாரத்தில் புதிய சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை பொறுத்து அதன் பொருளாதாரத்தின் நிலை குறியிடப்படும்.
வரும், 2026 – 2027ல் நம் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் அதாவது, 416 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
தற்போது உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் நம் நாடு 5வது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுக்குள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறது.
இந்த நிலையில் நம் நாட்டின் ஜி.டி.பி.,யானது முதல் முறையாக 4 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதாவது 333 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த பல மத்திய அமைச்சர்கள், தலைவர்கள், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். சர்வதேச நிதியத்தின் புள்ளி விபரங்களின்படி, இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளதாக அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மெஹ்வால், கிஷன் ரெட்டி, மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளனர்.