தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கனிம வளங்களை சுரண்டி வெளிமாநிலங்களில் விற்று வருகிறது. மணல் கொள்ளை வாயிலாக சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விடியாத திமுக அரசு நடத்தும் குவாரிகளில் மணல் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை என மாநிலம் முழுதும் உள்ள, மணல் குவாரிகளில் சோதனை நடத்தினர்.
ஒப்பந்ததாரர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மணல் விற்பனையில் 60 சதவீதம் கருப்பு பணம் புழக்கத்தில் இருப்பதை கண்டறிந்தனர். பின் மணல் குவாரிகளில் ‘ட்ரோன் கேமரா’ மற்றும் டிஜிட்டல் அளவை கருவி வாயிலாக அளந்தும் வீடியோ எடுத்தும் ஆய்வு செய்தனர்.
அப்போது 300 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து இருப்பது கண்டறியப்பட்டது. இது பற்றி நீர்வளத்துறையை சேர்ந்த பொறியாளர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 20) காலை 9:00 மணியளவில் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மணல் விற்பனை தொடர்பாக முத்தையா சில ஆவணங்களை தாக்கல் செய்தார். அதற்கும் எங்கள் ஆய்வு அறிக்கைக்கும் மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசம் உள்ளது. முத்தையா தாக்கல் செய்த ஆவணங்கள் ஜோடிக்கப்பட்டவை.
அவர் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் பொறுப்பை நான்கு மாதங்களுக்கு முன் தான் ஏற்றுள்ளார். முன்னதாக இருந்த ராமமூர்த்தி என்பவர் ஓய்வு பெற்றுவிட்டார். மணல் ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் உள்ளிட்டோருக்கும் ராமமூர்த்திக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
மணல் கொள்ளை விவகாரத்தில் ராமமூர்த்திக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுப்பற்றி முத்தையாவிடம் கேட்கப்பட்டது. அவர் பதிலை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளோம்.
நாங்கள் சம்மன் அனுப்பிய பின் கட்டாய விடுப்பில் செல்ல முத்தையா வலியுறுத்தப்பட்டு உள்ளார். அவர் வகித்த பொறுப்புக்கு அசோகன் என்பவர் வந்துள்ளார். அவர் பற்றியும் ஏராளமான புகார்கள் உள்ளன. மணல் கொள்ளை விவகாரத்தில், அசோகன் பங்கு குறித்தும் ஆவணங்கள் கிடைத்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளூர் மாவட்ட வடிநில கோட்ட செயற்பொறியாளராக பொதுப்பணி திலகம் என்பவர் உள்ளார்.
அவருக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மணல் கொள்ளை விவகாரத்தில் திலகத்தின் பங்கு குறித்தும் முத்தையாவிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் உள்ளார். அவரும் இந்த மணல் கொள்ளையில் சிக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. விரைவில் திமுக முக்கிய புள்ளிகள் மணல் கொள்ளையில் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.