சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான 751.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியை தலைமையிடமாக வைத்துக்கொண்டு, ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்’ நிறுவனம் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது.
கடன் நெருக்கடியில் இருந்தபோது இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது. இக்கடனில் இருந்து விடுபட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, ‘யங் இந்தியன்’ என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.
இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா, அவரது மகன் ராகுல் உள்ளனர். இந்த பரிமாற்றத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி 2013ல் வழக்கு தொடர்ந்தார். இது பற்றி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது.
இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றதடுப்புச் சட்டத்தின்கீழ் டெல்லி, மும்பை, லக்னோ உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் மற்றும் யங் இந்தியன் நிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று (நவம்பர் 21) முடக்கியது.
நேஷனல் ஹெரால்டு அலுவலகம் லக்னோவில் உள்ள நேரு பவன், மும்பையில் உள்ள ஹெரால்டு அலுவலகம் உள்ளிட்டவை முடக்கப் பட்ட சொத்துக்களில் முக்கியமானவை. இவற்றின் மொத்த மதிப்பு, 751.9 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.