திருச்சி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு.. சிபிஐக்கு உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதற்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த உதயகுமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: லால்குடி ஒன்றியம் மருதூர் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நீலகண்டன், தங்கப்பொண்ணு ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நீலகண்டன் வீட்டின் புகைப்படம், தங்கப்பொண்ணு மற்றும் வேறு சிலருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்கப்பொண்ணு கடந்த 2020 அக்டோபரில் உயிரிழந்தார். ஆனால் அவர் உயிருடன் இருப்பதுபோல போலியான அடையாள அட்டை தயாரித்துள்ளனர். இவ்வாறு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும், என அவர் மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. எனினும் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து திருச்சி எஸ்.பி. மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்: பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஏழைகளுக்குப் பயனளிக்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

இந்த திட்டத்தைக் கண்காணிக்கவேண்டிய மாவட்ட ஆட்சியர், தனது பணியைச் சரியாக மேற்கொள்ளவில்லை. கடைநிலை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து திருச்சி எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும். திருச்சி லஞ்ச ஒழிப்புப்பிரிவு டி.எஸ்.பி. வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்படுகிறார். பிரதமரின் வீடு கட்டும் திட்டமுறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த முறைகேடு வழக்கை கடைநிலை ஊழியர்களுடன் முடிக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. எனவே முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் வழக்குபதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறினால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும். வழக்கு நவம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top