தெலங்கானாவில் இன்று (நவம்பர் 25) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இறுதிக் கட்டப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அம்மா மாநிலத்தை இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவ்வின் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது அங்கு பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது.
தெலங்கானாவில் இன்று (நவம்பர் 25) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியை கடுமையாக சாடினார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
தெலங்கானாவில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது. பி.ஆர்.எஸ் கட்சியின் 9 ஆண்டு கால ஆட்சியால் சலிப்படைந்த மக்கள் அதில் இருந்து விடுதலை பெற விரும்புகின்றனர்.
மஞ்சள் வாரியம் உள்பட சொன்னதை நிறைவேற்றும் பாஜகவின் சாதனைகளை மக்கள் பார்க்கின்றனர். மடிகா சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை பாஜகவால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அநீதிக்கு முடிவு கட்ட மத்திய அரசு தீர்க்கமாக உள்ளது. இதற்கென
குழு ஒன்று அமைக்கப்பட்டு விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும். பாஜக சொல்வதை செய்யும். பாஜகவின் கடந்த கால வரலாறுகளை மக்கள் பார்த்து இருக்கின்றனர். முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வருவோம் என நாங்கள் சொன்னோம். அதன்படியே நிறைவேற்றினோம். ராமர் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தோம். அதுவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது’’ என்றார்.