காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு டிசம்பர் 17 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் பிரத்யேக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. பரிமாற்றம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் பண்டைய இந்தியாவில் கலாசார மையங்களாக திகழ்ந்த தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான உறவை புதுப்பிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
ஒரு மாதம் நடந்த இந்த நிகழ்வில் சிறப்பு ரயில்களின் வாயிலாக தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலை, பண்பாடு, உணவு போன்ற கலாசார ரீதியிலான பரிமாற்றங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காசி தமிழ் சங்கமம் நிகழ்வு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட நிகழ்வு டிசம்பர் 17 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் இருந்து 1,400 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இதற்காக எட்டு நாட்களுக்கான பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் கற்றலை மேம்படுத்தவும், கருத்து பரிமாற்றத்தை மேற்கொள்ள ஏதுவாக உள்ளூரில் பணியாற்றும் நெசவாளர், கைவினை கலைஞர்கள், தொழில்முனைவோர், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலக்கியம், ஆன்மிகம், கலை சார்ந்த கருத்தரங்குகள், விவாதங்கள், பயிற்சி பட்டறைகள் போன்றவை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் மற்றும் காசியின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் உள்ளிட்ட சிறப்பு தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் விற்பனை அரங்குகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், சென்னை ஐ.ஐ.டி., சார்பில் பிரத்யேகமாக உருவாக்கி உள்ள www.kashitamil.iitm.ac.in./ இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.