இந்திய ஜிடிபி 4 டிரில்லியன் டாலர்களை எட்டுவதற்கு முன்னதாகவே இந்திய பங்குச் சந்தை நேற்று (நவம்பர் 29) 4 டிரில்லியன் டாலர் மொத்த சந்தை மதிப்பு அளவீட்டை எட்டி சர்வதேச அளவில் புதிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மூலதனம் மதிப்பு முதல் முறையாக 333 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை தாண்டி டாலர் மதிப்பில் 4 டிரில்லியன் அளவீட்டை தொட்டு வரலாற்று உயர்வை எட்டியுள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை 4 டிரில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பை தொட்டு ஐந்தாவது அதிக மதிப்புடைய பங்குச் சந்தையாக உள்ளது.
2023ம் ஆண்டில் நிஃப்டி குறியீடு 10 சதவீத அதிகமாக உயர்ந்துள்ளது. இது எப்போதும் இல்லாமல் 2023ல் ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் சிறப்பான செயல்திறனை வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்ததோடு, சந்தை மதிப்பை சுமார் 51 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தை மதிப்பு, மே 2021-ல் 3 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட்ட நிலையில் வெறும் 2.5 வருடத்தில் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு அதிகரித்து 4 ட்ரில்லியன் டாலர் என வியக்க வைத்துள்ளது. இந்தத் தடாலடி உயர்வுக்கு ஐபிஓ வடிவில் புதிய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டதும் முக்கியக் காரணமாகும். இதன் வாயிலாகச் செப்டம்பர் மாதம் முதல் முறையாக நிஃப்டி குறியீடு 20000 புள்ளிகள் அளவீட்டை தொட்டு அசத்தியது.
சர்வதேச சந்தை சூழ்நிலைகள் காரணமாகச் செப்டம்பர், அக்டோபர் மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்த நிலையில், நவம்பர் மாதம் நெட் பையராக மாறியுள்ளனர். நவம்பர் மாதம் மட்டும் FII முதலீட்டாளர்கள் சுமார் 2901 கோடி ரூபாயை இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்த நிலையில் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 177.5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் வேளையில் இந்திய பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சரியாக 12 மணிக்கு மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 468.87 புள்ளிகள் உயர்ந்து 66,643.07 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 137.70 புள்ளிகள் உயர்ந்து 20,027.40 புள்ளிகளைத் தொட்டுள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் துறைவாரியான குறியீடுகளில் மீடியா, ரியாலிட்டி, கன்ஸ்யூமர் டியூரபிள் ஆகிய 3 குறியீடுகள் மட்டுமே சரிவுடன் இருக்கும் நிலையில் மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்வுடன் உள்ளது. இதேபோல் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐடிசி, அல்ட்ரா டெக், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், என்டிபிசி, டைட்டன், நெஸ்லே ஆகியவை சரிவுடன் உள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் மஹிந்திரா மற்றும் விப்ரோ ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வுடன் இருக்கிறது. ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, ஹெச்டிஎப்சி, ஹெச்சிஎல், இன்போசிஸ் ஆகியவை 1 சதவீத உயர்வுடன் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் 2007 இல் ஒரு ட்ரில்லியன் டாலராக இருந்த தேசிய பங்கு சந்தை மதிப்பு, 2017 நரேந்திர மோடி ஆட்சியில் இரண்டு டாலராக உயர்ந்தது. பத்து ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலர் மட்டுமே ( ஒரு மடங்கு ) உயர்ந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் தற்போது நான்கு ட்ரில்லியனாக உயர்ந்திருக்கிறது. 2017ல் 2 ட்ரில்லியன், 2021 ல் 3 ட்ரில்லியன், 2023 இல் நான்கு ட்ரில்லியன் என அசுரவேக வளர்ச்சி கண்டுள்ளது.
ஹிட்டன் பர்க்கின் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை கொண்டு, அதானி பங்குகளை வீழ்த்தாமல் இருந்திருந்தால் 4 ட்ரில்லியன் டாலர் பங்குச்சந்தை மதிப்பை இதற்கும் ஆறு மாதத்திற்கு முன்பு நாம் பெற்றிருப்போம் என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள். 4 ட்ரில்லியன் ஜிடிபி பொருளாதார உயர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில், தேசிய பங்குச் சந்தை 4 ட்ரில்லியன் எட்டியிருப்பது, விரைவில் நாம் நான்கு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறி விடுவோம் என்பதற்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வேகத்தில், பிரதமர் மோடியின் கனவான ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்பது வெகு தொலைவில் இல்லை என்பதும் நிபுணர்களின் கருத்து!