அணிவகுப்பு நடக்க வழக்காடிய வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் பாராட்டு விழா!

அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தற்கு நீதிமன்றம் மூலம் போராடி, வாதாடி அனுமதி பெற்று தந்த சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பாராட்டு விழா நேற்று (நவம்பர் 29) நடைபெற்றது.

சென்னை சேத்துப்பட்டு சக்தி அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மூத்த வழக்கறிஞர்கள் ஏ.என்.ராஜா, ராஜகோபால், கார்த்திகேயன் உட்பட 79 வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை வழக்கறிஞர் ராஜேஷ் விவேகானந்தன் தொகுத்து வழங்கினார். ஆர்.எஸ்.எஸ். மாநில இணை செயலாளர் மக்கள் தொடர்பு இராமராஜசேகர் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பாளர் ரவிக்குமார் வழக்கறிஞர்களை பாராட்டி உரையாற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து வழக்கறிஞர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு புத்தகங்கள் அளிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் கௌரவிக்கப்பட்டனர்.

பின்னர் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்கள் மற்றும் காவல்துறையும் அரசு அதிகாரிகளையும் எதிர்கொண்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக தென் பாரத பிரமுகர் பிரகாஷ் அனைவரையும் வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார். ஆர்.எஸ்.எஸ். மாநில இணை அமைப்பாளர் பிரஷோப குமார் நன்றியுரை ஆற்றினார்.

இதன் பின்னர் பாராட்டு விழாவில் பங்கேற்ற வழக்கறிஞர் ரபு மனோகர் பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்ட 1925 முதல் சீருடை அணிவகுப்பை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புகளில் வன்முறைகள் நடந்ததாக எந்த வரலாறும் இல்லை.

தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிதான் அனுமதி பெற வேண்டியுள்ளது.

இந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும் தி.மு.க., அரசின் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. அதனால் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நவம்பர் 19ல் தமிழகத்தில் 53 இடங்களில் வெற்றிகரமாக அணிவகுப்பு நடந்து முடிந்தது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பைத் தடுக்க அனைத்து அடக்குமுறைகளையும் காவல் துறை கையாண்டது. அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் வீடுகளுக்கு நள்ளிரவில் 10க்கும் அதிகமான காவலர்களுடன் சென்று அச்சத்தை ஏற்படுத்தினர்.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்து கட்டுப்பாடுகள் வழிமுறைகளை பின்பற்றினோம். ஆனாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்தனர்.

நீதிமன்றம் அனுமதித்தும், இசைக் கருவிகளை வாசிக்கக் கூடாது என காவல் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.

பொருத்தம் இல்லாத காரணங்களைக் கூறி ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மட்டுமல்லாது சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., எவ்வித அடக்குமுறைக்கும் அஞ்சக்கூடிய இயக்கம் அல்ல. அரசு தரும் நெருக்கடிகளை பயிற்சியாக எடுத்துக் கொண்டு இன்னும் வேகத்துடன் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்ட இயக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top