நாடு முழுவதும் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000ல் இருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவம்பர் 30) துவக்கி வைத்தார்.
மத்திய அரசின் நலத் திட்டங்கள் மற்றும் அதனால் பயனடைந்தவர்களின் கருத்துகளை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ எனப்படும் வாகன பேரணியை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 15ம் தேதி ஜார்க்கண்டில் துவக்கி வைத்தார்.
மத்திய அரசின் திட்டங்களை அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட பேனர்களுடன் உள்ள வாகனங்கள், நாடு முழுவதும் வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாரம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு நலத்திட்டம் வாயிலாக பயனடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று (30.11.2023) உரையாடினார். அப்போது யாத்திரையின் அனுபவங்கள் மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் அரசின் அர்ப்பணிப்பு குறித்து அவர்களிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்திரை மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இதுவரை 12,000 பஞ்சாயத்துகளை இந்த பிரசாரம் எட்டியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக என் பணியை பார்த்து, மத்திய அரசின் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்.
மற்றவர்களிடம் இருந்து மக்களின் எதிர்பார்ப்புகள் முடிவடையும் இடத்தில் இருந்து மோடியின் உத்தரவாதம் துவங்குகிறது என்ற குரல் நாடு முழுதும் கேட்கிறது.
என்னை பொறுத்தவரை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என நான்கு பெரிய ஜாதிகள்தான் உள்ளன. அவர்களின் வளர்ச்சியே இந்தியாவை முன்னேற்றம் அடையச் செய்யும்.
நாட்டை வளர்ச்சியடையச் செய்ய மக்கள் தீர்மானித்திருப்பதால், பாரதம் நிற்கவோ சோர்வடையவோ போவதில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய அரசு பிரதிபலனை எதிர்ப்பார்க்கும் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை உடைய அரசாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் போது, ஒடிஷா மாநிலம் தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000வது மக்கள் மருந்தக மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை துவங்கி வைத்தார்.
மக்கள் மருந்தகத்தில் விலை குறைவாகவும் உயர்த்தர மருந்துகள் கிடைப்பதால் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். உயிர் காக்கும் பல மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்வதால் அனைத்து தரப்பு மக்களையும் ‘மக்கள் மருந்தகம்’ சென்றடைந்துள்ளது.