வைக்கோலில் மறைத்து வைத்து லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட, 2,953 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் கோவையில் நாச வேலைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக என கியூ பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தருமபுரியில் இருந்து லாரியில் கோவைக்கு வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக கடந்த நவம்பர் 29ம் தேதி நள்ளிரவு சேலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கருப்பூர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
எஸ்.எஸ்.ஐ., ஞானசேகரன் தலைமையில் போலீசார் வைக்கோல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர். அதில் வைக்கோலால் மறைக்கப்பட்ட நிலையில் 101 பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதனை பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 100 பெட்டிகளில் ஜெலட்டின் ஜெல், 2,580 கிலோ, ஒரு பெட்டியில், 950 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 3 மீட்டர் ஒயர் என மொத்தம் 2,953 கிலோ வெடி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
வெடிபொருட்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்தனர். மேலும் ஓட்டுநர் இளையராஜாவுடன் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர் பிருந்தா விசாரணை நடத்தினர்.
அப்போது விசாரணையில், வைக்கோலை ஏற்றியவர்கள், லாரியை மெதுவாக ஓட்டும்படியும், கோவை எல்லைக்குள் சென்றதும் செல்போனில் தொடர்பு கொள்ளும்படியும் கூறி செல்போன் எண் தந்ததாக தெரிவித்தனர்.
இதன் பின்னர் ஓட்டுநர் அளித்த செல்போன் எண் யாருடையது என்றும், பெட்டிகளில் இருந்த முகவரிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வித ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதால் நாச வேலைக்கு திட்டமிட்டுள்ளனரா என்ற கோணத்திலும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு கோவையில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் திடீரென்று வெடித்து அதில் இருந்த பயங்கரவாதி உயிரிழந்தான். இதன் பின்னால் மிகப்பெரிய பயங்கரவாத சதித்திட்டம் இருப்பதை என்.ஐ.ஏ., கண்டறிந்து அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் அதன் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் மீண்டும் 3 டன் அளவிற்கு வெடிபொருட்கள் பறிமுதல் செய்திருப்பது கோவை மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.