நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (டிசம்பர் 3) நடந்தது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க., அரசு செய்த சாதனைகள் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சென்றுள்ளதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.
இது பற்றி உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரகுபதி ராகவ ராஜாராம் எனக்கூறிய காந்தியின் கட்சியாக அறியப்பட்ட காங்கிரஸ், இன்றைக்கு சனாதன தர்மத்துக்கு எதிரான கட்சி என பெயர் எடுத்துள்ளது.
கட்சிக்குள் இடதுசாரி கொள்கையுடன் இருக்கும் சில தலைவர்கள் கட்சியின் கொள்கையை அந்த பாதையில் திசை திருப்புகின்றனர். அவர்களை கட்சி தலைமை வெளியேற்ற வேண்டும். ஜாதி அரசியலை மக்கள் என்றைக்குமே ஆதரித்தது இல்லை.
சனாதன தர்மத்துக்கு எதிராக பேசி சாபத்தை தேடிக் கொண்ட காரணத்தால் காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சனாதன தர்மத்தை எதிர்த்த தி.மு.க.வை காங்கிரஸ் ஆதரித்து வந்ததை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிலும் அவர்களின் ஊழல்களை என்றைக்கும் மறக்கவே மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.