மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க., மீண்டும் இமாலய வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க அங்கு மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களே காரணம் என தெரியவந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் பா.ஜ.க., இங்கு ஆட்சி செய்துள்ளது. கடந்த 2003ல் துவங்கி தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, 2018 தேர்தலில் தோல்வியடைந்தது. ஆனாலும் உட்கட்சி மோதலால் காங்கிரஸ் ஆட்சியை இழக்க 2020ல் மீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைத்தது.
தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க, 165 இடங்களில் வெற்றி பெற்று மத்திய பிரதேசத்தை தன் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மக்களுக்கு அதிருப்தி இருப்பதாகக் எதிர்க்கட்சிகளால் சொல்லப்பட்டு வந்தாலும், பா.ஜ.க, அபார வெற்றி பெற்றதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.
எதிர்க்கட்சிகளின் சதியை உணர்ந்த பா.ஜ.க, சரியான காய் நகர்த்தலை மேற்கொண்டது. முதல்வர் வேட்பாளர் என்று யாரும் அறிவிக்கப்படாமல் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே முன்னிறுத்தப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதைத் தவிர தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கினர். காங்கிரஸ் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டாலும், ‘மோடியின் மனதில் மத்திய பிரதேசம்; மத்திய பிரதேசம் மனதில் மோடி’ என பா.ஜ.க, செய்த பிரசாரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
காங்கிரஸ் தன் இஸ்டத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட இலவச அறிவிப்புகளை அறிவித்தாலும் அதனை முறியடிக்கும் முயற்சியில் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
தற்போது பெரும்பாலான மாநிலங்களில் பின்பற்றப்படும் பெண்களுக்கு மாதம் 1,250 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் மற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 12,000 ரூபாய் உதவித் தொகை திட்டங்கள், பெண்கள், ஏழை, எளிய மக்கள், விவசாயிகளின் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு பெரும் உதவியாக அமைந்தது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி என்ற, ‘டபுள் இன்ஜின்’ பிரசாரம் மீண்டும் கைகொடுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்துக்கு கிடைத்துள்ள திட்டங்கள் குறித்து பா.ஜ.க, வேட்பாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
பா.ஜ.க, மக்களோடு பிரச்சாரம் செய்த நிலையில், காங்கிரஸ் வெறும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்தது. அது மட்டுமல்லாது 1200 இலவச அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. இதனை அம்மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. மக்கள் நலத்திட்டங்களுக்கே முக்கியத்துவம் அளித்து பா.ஜ.க.வுக்கு வாக்களித்திருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் பா.ஜ.க, மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தான் ஒரு தேர்தல் இயந்திரம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மிகச் சிறந்த தேர்தல் வியூக நிபுணரான அவர் கடந்தாண்டு மத்தியிலேயே தேர்தல் பணிகளை துவக்கி விட்டார்.
மத்திய பிரதேச மக்களின் மனதில் பிரதமர் மோடி உள்ளார். டபுள் இன்ஜின் அரசுகள் செய்த பணிகள், செயல்படுத்திய திட்டங்கள், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக அமைந்திருந்தன. அவை தேர்தலில் வெளிபட்டுள்ளன. நாங்கள் அனைவரும் கடின உழைப்பை வெளிப்படுத்தினோம். ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை எதுவும் இல்லை. மக்களை திசை திருப்ப காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சி அது. யார் முதல்வர் என்பதை கட்சித் தலைமையே முடிவு எடுக்கும். அது எதுவாக இருந்தாலும் ஏற்போம் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.