கருணாநிதி சிலை வைக்க இடம் கொடுக்காததால் முட்டுக்கல்லை நட்டுவிட்டனர்: சேலம் மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் பேட்டி!

கருணாநிதிக்கு சிலை வைக்க இடம் கொடுக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்ததால் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முட்டுக்கல்லை நட்டு வைத்து விட்டனர் என அதன் உரிமையாளரும், வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குநருமான விஜயவர்மன் தெரிவித்துள்ளார்.

சேலம் – ஏற்காடு சாலையில் 1935ம் ஆண்டு டி.ஆர்.சுந்தரத்தால் தொடங்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி, கருணாநிதி,  உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். 1982 வரை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டது.
 
பின்னர் வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் அந்த இடத்தை வாங்கி வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது. தற்போது நினைவு வளைவுடன் கூடிய நுழைவுவாயில் மற்றும் சிறிய காலியிடம் 1,345 சதுரஅடி மட்டுமே உள்ளது. முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரியில் சேலம் வந்தபோது நுழைவுவாயில் அருகே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இதன் பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு அலங்கார வளைவில் ‘இந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது. அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை பேனர் கட்டப்பட்டுள்ளது. மேலும் நுழைவுவாயிலின் உட்பகுதியில், நெடுஞ்சாலைத் துறையால் முட்டுக்கல் நடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவன நிர்வாக இயக்குநர் விஜயவர்மன் சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று (டிசம்பர் 14) கூறியதாவது:

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் நினைவு வளைவு அருகே நின்று முதல்வர் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது முதல்வர் என்னை சந்திக்க விரும்புவதாக எனக்கு தகவல் வந்தது. நான் எனது மனைவியுடன் சென்று முதல்வரை சந்தித்தேன்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை பராமரித்து வருவதற்காக மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர், விருப்பமிருந்தால் அந்த இடத்தை தர முடியுமா என்று கேட்டார். மேலும் கட்டாயம் எதுவுமில்லை என்று கண்ணியத்துடன் கூறிவிட்டார். குடும்பத்தினரை ஆலோசித்துவிட்டு தகவல் தெரிவிப்பதாக அவருக்கு பதில் கூறினேன்.
 
பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் அருகே கருணாநிதி சிலையை வைப்பதற்கு இடம் தேவைப்படுகிறது என்று கேட்டு மாவட்ட அதிகாரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர்.
 
இதற்கிடையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஏற்காடு சாலையின் எல்லையை அளவீடு செய்வதாகக் கூறி மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் இருக்கும் இடத்துக்குள் கடந்த 1-ம் தேதி முட்டுக்கல் நட்டுவைத்து நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்று எச்சரிக்கை பேனர் வைத்து விட்டனர்.
 
அந்த நிலம் எனக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். சேலத்துக்கு வந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, மற்றும் 3 முதல்வர்கள் இருந்த இடம் மாடர்ன் தியேட்டர்ஸ். எனவே அதன் நினைவாக இருக்கும் நுழைவுவாயிலைப் பாதுகாக்க வேண்டும் என்று எனது தந்தை தெரிவித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படத் துறையினர் பணிபுரிந்த இடம் என்பதால் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் நினைவு வளைவை தற்போதுவரை நன்கு பராமரித்து வருகிறோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top