உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம்: சூரத்தில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

உலகிலேயே மிகப்பெரிய வைர வர்த்தக மையத்தை குஜராத் மாநிலம், சூரத் நகரில் பிரதமர் நரேந்திர மோடி (டிசம்பர் 17) தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத் மாநிலம், சூரத் நகரம் திகழ்ந்து வருகிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுகிறது. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதமாக ‘சூரத் வைர பங்குச்சந்தை’ என்ற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டது. சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.

இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுரஅடி ஆகும். டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ், சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன.

இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (டிசம்பர் 17) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை தற்போது சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது. இதனால் உலகத்தில் அனைவரின் பார்வையும் சூரத் நகரம் மீதுதான் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வல்லரசை நோக்கி நமது பாரதம் சென்று கொண்டிருப்பதற்கான சிறந்த உதாரணமாக இந்த வர்த்தக மையம் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top