நாடாளுமன்றத்தில் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவத்தில் 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவற்றில் பலரை மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிமான ஜெக்தீப் தன்கர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பிகள் நேற்று (டிசம்பர் 19) போராட்டம் நடத்துவதாக கூறி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்து கொண்டிருந்தார். அதனை மற்ற எம்.பி.க்கள் கைத்தட்டி ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது செல்போனில் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இது பற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், ‘‘ஒரு எம்.பி. என்னைக் கேலி செய்வதையும், மற்றொரு முக்கியஎதிர்க்கட்சி எம்.பி. அதை வீடியோ எடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு வெட்கக்கேடான செயல்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற ராஜ்ய சபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெக்தீப் தன்கர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் தொலைப்பேசி வழியே உரையாற்றினார். அப்போது நாடாளுமன்றத்தில் என்னைப் போல மிமிக்ரி செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகக் கேவலமான நடத்தைக் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார்.
இந்த சம்பவத்துக்கு வேதனையடைந்தார். கடந்த இருபது ஆண்டுகளாக இதுபோன்ற அவமானங்களுக்கு தானும் ஆளாகியிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இந்தியத் துணை ஜனாதிபதி போன்ற அரசியலமைப்பு அதிகாரத்தில் இருப்பவர் மீது, அதுவும் நாடாளுமன்றத்தில் இப்படி நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.
அதற்கு பதிலளித்த நான் ‘ஒரு சிலரின் கோமாளித்தனங்கள் எனது கடமையைச் செய்வதிலிருந்தும், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நிலைநிறுத்துவதிலிருந்தும் என்னைத் தடுக்காது. நான் ஆழமாக அரசியலமைப்பின் மீதான மரியாதையில் உறுதியாக இருக்கிறேன். எந்த அவமானமும் என்னை என் பாதையை மாற்றாது’ எனக் கூறினேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எம்.பி.களின் செயலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, ‘‘நாடாளுமன்ற வளாகத்தில் நமது மதிப்பிற்குரிய குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன். நாடாளுமன்ற பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை வெளிபடுத்த சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதையை பேணும் வகையில் இருக்க வேண்டும். அதுதான் நாம் பெருமைப்படும் பாராளுமன்ற பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
தோல்வி பயம் எதிர்க்கட்சிகளின் உண்மை சொரூபத்தை காட்டியுள்ளது. அவர்கள் எவ்வளவுதான் நாகரீகமாக நடித்தால் அவர்கள் பண்பற்றவர்கள் என்பது உண்மை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறது என்கிறார்கள் மக்கள்!