உயிரிழந்தவர்களின் உடலை வைக்க இடமில்லாமல் தடுமாறும் அரசு மருத்துவமனைகள்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுவரையில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை கூட இந்த விடியாத திமுக அரசு வெளியிடவில்லை. அரசு மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாக்க கூட முடியாத அரசாக இந்த விடியாத அரசு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நடுத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (54). இவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏரல் பகுதிக்கு அவரது உடலைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அந்த உடல் வைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட அரசு மருத்துவமனையில் 18 உடல்கள் வரை குளிர்சாதனக் பிணவரை கிட்டங்கில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது 18 உடலுக்குமேல் அங்கு இருப்பதால் வேறு வழியின்றி வேல்முருகன் உடலை பாதுகாப்பாக வைக்க கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால், அரசு மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் குளிர்சாதன பிணவறை கிட்டங்கிகளுக்கு உடல்களை அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் பிணவறை பிரிசரின் கொள்ளளவு 18 என்றால் எதற்காக வெளியில் 20 ஆம்புலன்சுகள் வைக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளால் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து விடியாத திமுக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அரசு மருத்துவமனை பிணவறையில் 50க்கும் மேற்பட்ட சடலங்கள் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. எனவே மக்களின் சந்தேகங்களையும், அச்சத்தினையும் களைவதற்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைப் பிணவறை முன்பு அணிவகுத்துள்ள ஆம்புலன்சுகள் பற்றியும் இந்த விடியாத திமுக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே சென்னை பெருமழையின்போது ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்து நிலையில், உடலை அட்டைப் பெட்டியில் வைத்து பெற்றோர்களிடம் இந்த விடியாத அரசு ஒப்படைத்ததை நாடே பார்த்தது. தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெருமழையில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரங்களை வெளியிடாமல் மூடி மறைக்க பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top