அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் வைக்கப்படும் மூலவர் ஸ்ரீராமர் சிலை வருகின்ற ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வர உள்ளனர்.
இந்த நிலையில், அயோத்தியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக லக்னோ காவல்துறை இணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “ராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவின்போது, அயோத்தியில் பக்தர்கள் பெருமளவு சாலைகளில் பாதயாத்திரையாக வருவார்கள் என்பதால், இதர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு வரவிருப்பதால், அவர்களின் வசதிக்காக நகர் முழுவதும் வழிகாட்டிப் பலகைகளும், அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட உள்ளன. ஹிந்தி, ஆங்கில மொழிகளுடன் நாட்டில் அதிகமாக பேசக்கூடிய தமிழ் போன்ற பிற மொழிகளிலும் வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.