மழை வெள்ளம் பாதித்தபோது முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இ.ண்.டி. கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்படியிருக்கையில் மத்திய அரசை குறை கூறுவது நியாயமா என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் இன்று (டிசம்பர் 22) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் புயலால் பாதித்து உயிரிழந்தவர்கள் மற்றும் உடமைகள் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசுக்கு மழை செய்தி கிடைத்தவுடன் உடனடியாக உதவி செய்ய வேண்டிய நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அந்த முயற்சிகளை தற்போது செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒரு ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 50 சென்டி மீட்டர் மழை என்பது ஓராண்டில் பெய்ய வேண்டியவை. ஆனால் அங்கு ஒரே நாளில் பெய்துவிட்டது. இதன் காரணமாக தண்ணீர் தேங்கி, வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இந்த செய்தி கடந்த டிசம்பர் 18ம் தேதி அரசுக்கு கிடைத்துவிட்டது.
அன்றைய நாள் நாடாளுமன்றம் நடைபெற்று வந்தது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினேன். உடனடியாக முப்படைகள் களத்தில் இறங்கின. தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் விமானப்படை, கப்பற்படை உள்ளிட்டவையும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக நான்கு மாவட்டங்களுக்கும் சென்றனர். நாம் மேற்கொண்ட பாதுகாப்பு பணிகள் பற்றி எக்ஸ் பதிவிலும் பதிவிட்டுள்ளேன்.
மேலும் டிசம்பர் 21ம் தேதி வரை 41,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படைகள் மற்றும் மாநில பேரிடர் படையின் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்தபோதும் தற்போது 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு மாற்று ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அனைத்து அதிகாரிகளும் இணைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் உள்ளன. நான்கு மாவட்டத்தின் நிலைமைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வந்தன.
இந்திய விமானப்படை மூலமாக 5 ஹெலிகாட்டர்கள், டிசம்பர் 21ம் தேதி மாலை வரை ஒரு ஹெலிகாப்டர் 70 முறை என்று 5 ஹெலிகாப்டர்களும் மக்களை மீட்கும் பணியில் இறங்கின. கடற்படையின் மூலம் 9 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு கடலோரம் இருந்த மக்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்த பின்னரே மத்திய படைகள் திரும்பிச் செல்லும்.
அதே போன்று சென்னையில் நடைபெற்ற மிக்ஜாம் புயலின்போது கூட அனைத்து பணிகளையும் ராணுவம் மேற்கொண்டது.
தேசிய பேரிடர் மீட்புப்படை, கடற்படை, ராணுவம், விமானப்படை, கடலோரப் காவல் படை சேர்ந்து 5049 பேரை மீட்டுள்ளனர். வெலிங்கடன் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவம் மீட்புப்பணிக்கு சென்றது. களத்தில் உடனடியாக சென்றதால் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க முடிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பேரிடர் பணிக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அதன்படி மத்திய அரசு 2023ம் ஆண்டுக்கு 813.15 கோடி ரூபாய் கொடுத்த நிதி மாநில அரசிடம் உள்ளது. தற்போதைய ஆண்டுக்கு 900 கோடிக்கு 450 கோடி புயல் வருவதற்கு முன்பாக மத்திய அரசு வழங்கிவிட்டது. மீதி 450 கோடி பணத்தையும் டிசம்பர் 12ம் தேதி தமிழக அரசுக்கு கொடுத்தாகிவிட்டது.
தமிழகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் தரமானது:
தமிழகத்தில் வானிலை ஆய்வு மையம் சென்னையில் உள்ளது. தென்மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் மிகத்தீவிரமான மழை வரும் என்று முன்கூட்டியே 12ம் தேதியே எச்சரிக்கை விடுத்தது. வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் மழை எப்படி பெய்யும் என்பதையும் எச்சரிக்கை செய்து வந்தது. தமிழகத்தில் உள்ள வானிலை மையத்தில் உள்ள கருவி மிக உயரியது. அவை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வல்லமை படைத்தது. ஆனால் மாநில அரசு போதுமான முன்னெச்சரிக்கையை எடுக்கவில்லை.
மழை பெய்யும் போது ஸ்டாலின் டெல்லியில் இருந்தது ஏன்:
கடந்த 2015 மழை வெள்ளத்தின் போது நான் அம்பத்தூரில் ஆய்வு மேற்கொண்டேன். 2015ல் வெள்ளத்தில் பாடம் கற்றிருந்தால் தற்போது அம்பத்தூரில் மழை வெள்ளம் தேங்கிருக்காது. அந்த வெள்ளத்தில் தமிழக அரசு கற்றுக்கொண்டது என்ன? மழை பாதிப்பின்போது முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழக முதல்வர் எதற்காக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது இதன்மூலம் தெளிவாக தெரியும்.
கூட்டணி கூட்டத்தை முடித்துக்கொண்டு இரவு நேரத்தில் பிரதமரை சந்திப்பதாக முதல்வர் கூறினார். அதன்படி போகிறப்போக்கில் சாவகாசமாக இரவில் பிரதமர் நரேந்திர மோதி ஐயாவை சந்தித்தார். வெள்ளத்தின் போது டெல்லியில் இருந்துகொண்டு மத்திய அரசை குறை கூறுவது நியாயமா? நாங்கள் செய்ய வேண்டியதை செய்துக்கொண்டே இருக்கிறோம், குறையே சொல்வதில்லை.
தேசிய பேரிடர் எந்த மாநிலத்திலும் அறிவிக்கவில்லை:
தேசிய பேரிடர் என மத்திய அரசு அறிவிக்கவே இல்லை. எந்த மாநிலத்திற்கும் இதனை அறிவிப்பது இல்லை. மாநில அளவில் இது பேரிடர் என அறிவிக்க விரும்பினால் அதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளம் வந்தபோதும் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடவில்லை. இந்தியாவில் இதற்கு முன்பு எப்போதும் தேசிய பேரிடர் என்ற ஒன்று அறிவிக்கப்பட்டதில்லை. மாநில அரசு வேண்டுமானால் தேசிய பேரிடர் என அறிவித்துக் கொள்ளலாம். என்னவானது 4000 கோடி முதல்ல நாலாயிரம் கோடி பணத்தில 92% வேலை முடிஞ்சதுன சொன்னாங்க. கடைசியில் 42% தான் முடிஞ்சிருக்குன சொல்றாங்க. பணத்தை வாங்கி வச்சிட்டு என்ன பண்ணுனீங்க! 42க்கும் 92க்கும் வித்தியாசம் தெரியாத அமைச்சர் 2cm கூட மழை வரும்ன சொல்லி இருந்தா நடவடிக்கை எடுத்திருப்போம்ன சொல்றாரு! உங்களுக்கு 42க்கும் 92க்கும் வித்தியாசம் தெரியலையே!
உதயநிதிக்கு பதிலடி:
இது உன் அப்பன்வீட்டு காசா என முதல்வரின் குடும்பத்தை சேர்ந்த அமைச்சர் உதயநிதி பேசுகிறார். அவர் இருக்கும் பதவி உட்பட எல்லாம் அவரது அப்பா வீட்டு காசா என கேட்க முடியுமா? இது என்ன மாதிரியான பாஷை? இந்த மாதிரியான பேச்சுகள் அரசியலில் நல்லதல்ல. பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். அவரது தாத்தா எவ்வளவு பெரிய தமிழறிஞர்? நாக்கில் பதவிக்கு ஏற்ற அளவிற்கு வார்த்தைகள் அளந்து வர வேண்டும்.
மழைக்கு முன்னதாகவே ரூ.900 கோடியை மத்திய அரசு கொடுத்தது. அது என் அப்பன் சொத்து என்றோ, உங்கள் அப்பன் சொத்து என்றோ சொல்ல மாட்டேன். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.