விடியா திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும், தேவையும் ஏற்பட்டுள்ளது என கட்சி சார்பற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய, கட்சி சார்பற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் தமிழக பிரிவு, நேற்று (டிசம்பர் 21) சென்னையில் துவங்கப்பட்டது. இதன் தலைவராக அய்யாகண்ணு, ஒருங்கிணைப்பாளராக பி.ஆர்.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டனர்.
பின், பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாதது. பல மடங்கு விவசாயிகளுக்கு விரோதமாக இது உள்ளது.
இந்த சட்டம் விளை நிலங்களை மட்டுமின்றி, அருகில் உள்ள நீர்நிலைகளையும் அபகரிக்க வழி செய்கிறது. எதிர்த்து போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவி சிறையில் அடைக்கும் கொடுமை அரங்கேற்றப்பட்டு வருகிறது.
தமிழக அரசிற்கு எதிரான போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும், தேவையும் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக தேசிய அளவிலான அமைப்புகளுடன் சேர்ந்து கட்சி சார்பற்ற அமைப்பை தமிழகத்தில் துவங்கி உள்ளோம்.
வரும் பிப்ரவரி 26ம் தேதி பஞ்சாபில் துவங்கி டெல்லி நாடாளுமன்றம் நோக்கி நடைபெற உள்ள பேரணியில் தமிழக பிரிவும் பங்கேற்கும்.
தமிழக அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஜனவரி 24ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (டிசம்பர் 21) ஆர்ப்பாட்டம் நடத்தினர். கையில் தட்டு ஏந்தி விடியாத திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது பற்றி சங்கத் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:
சம்பா நெல் சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்.
தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய், கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயை கொள்முதல் விலையாக வழங்கவில்லை. இலவச விவசாய மின் இணைப்பில், ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விட்டு நில ஒருங்கிணைப்பு சட்டத்தில் விவசாயிகளை நசுக்குகின்றனர். விவசாயிகளுக்கு மன உளைச்சல் தரும் அரசாக திமுக அரசு மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.