உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு இன்று (30.12.2023) சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி நகருக்கான ரூ.11 ஆயிரம் கோடி திட்டப்பணிகளையும், பிற மாவட்டங்களுக்கான ரூ.4 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
அத்துடன், புதிய விமான நிலையம் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி தாம் ரயில் நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதற்காக அயோத்தி வந்துள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
பிரதமருக்கு உற்சாக வரவேற்பு:
பிரதமர் நரேந்திர மோடி மறுசீரமைக்கப்பட அயோத்தி தாம் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்காக விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு சாலை மார்க்கமாக காரில் சென்றார். பிரதமரை வரவேற்பதற்காக சாலையின் இருபுறமும் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டனர்.
அவர்கள் பிரதமருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவர்களை பார்த்து கையசைத்தபடி பிரதமர் சென்றுகொண்டிருந்தார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுப்பொழிவுடன் புனரமைக்கப்பட்ட அயோத்தி தாம் ரயில் நிலையம்:
ராமர் கோயிலில் தரிசனத்திற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளதால் அயோத்தி ரயில்வே நிலையத்தை புனரமைக்கும் பணியானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அயோத்தி வருவதற்கு ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவர். அந்த வகையில் அயோத்தி தாம் ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் மூன்று கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் முதற்கட்டப் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
தற்போது ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அயோத்தி ரயில் சந்திப்பு தற்போது அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டு உள்ள இந்த ரயில் நிலையம் பார்ப்பதற்கு ராமர் கோயில் போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தை புனரமைக்கும் திட்டத்திற்கான மொத்த செலவு 430 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஒரு லட்சம் பயணிகள் வரை வந்தாலும் கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு லிஃப்டுகள், எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வு அறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பெண் ஊழியர்கள் தங்கும் இடங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த ரயில் நிலையத்தில் பகலில் குறைந்த அளவிலான மின்சாரமே போதுமானது. ஏனெனில், இயற்கை ஒளியை உள்ளே அனுமதிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் சிக்கனத்திற்காக, மழை நீர் சேகரிப்பு வசதியும் இங்கு உள்ளது. இங்கு பயணிகளின் வசதிக்காக சுற்றுலா தகவல் மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ராமர் கோயில் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்களை பயணிகள் சிரமம் இன்றி அறிந்து கொள்ள முடியும்.
6 புதிய வந்தே பாரத் ரயில் சேவை:
நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் செல்லக்கூடிய 6 வந்தே பாரத் – 2 அம்ரித் பாரத் அதி விரைவு ரயில்களை அயோத்தியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அம்ரித் பாரத் அதிவிரைவு ரயில்
1) அயோத்யா – தர்பங்கா (பீஹார்)
2) மால்டா டவுன் (மேற்கு வங்கம்) – பெங்களூரு
வந்தே பாரத் அதிவிரைவு ரயில்
1) அயோத்யா – ஆனந்த் விஹார் (டெல்லி)
2) புது தில்லி – கட்ரா (வைஷ்ணவி தேவி)
3) புது தில்லி – அம்ருத்ஸர்
4) கோயம்புத்தூர் – பெங்களூரு
5) மங்களூரு – மடகான் (கோவா)
6) மும்பை – ஜால்னா (மகாராஷ்டிரா) ஆகிய வழித்தடங்களில் இயங்க உள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள், தகவல் தொடர்பு வளர்ச்சி, கடவுள் இராமரின் நகரான அயோத்தியின் உயர்ந்த பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறேன். அதோடு, பல்வேறு திட்டங்களை திறந்து வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.