உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி தாம் ரயில் நிலையம் பெயர் பலகையில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் மிக பிரமாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வந்த நிலையில், இதற்கான பணிகள் முடிந்து ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருகை தர உள்ளனர். ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் அயோத்திக்கு வருவார்கள். எனவே அவர்கள் எளிதாக அடையாளம் காண்பதற்காக ரயில் நிலைய பெயர் பலகையில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
அதே போன்று தமிழ் மொழியும் எழுதப்பட்டிருப்பது தமிழக பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, உலகத்தில் எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழ் மொழியின் பெருமையையும் அதன் சிறப்புகளையும் எடுத்துக்கூறி வருகிறார். அதே போன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் தமிழ்ச் சங்கம் மாநாட்டையும் பாஜக அரசு சிறப்பாக நடத்தி வரும் நேரத்தில் அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் தமிழ் மொழி எழுதப்பட்டிருப்பது இன்னும் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் இது போன்று ஏதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் இந்தியில் பெயர் எழுதப்பட்டிருந்தால், அய்யய்யோ, நரேந்திர மோடி அரசு இந்தியை திணித்துவிட்டது என கூப்பாடு போடுவார்கள். ஆனால் சத்தமில்லாமல் மத்திய அரசு தமிழ் மொழியை நாடு முழுவதும் எடுத்துச்சென்றுள்ளது.