ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகை இரு மடங்காக உயர்கிறது. இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகிறது. இதன் வாயிலாக இனி 10 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை நோயாளிகள் இலவசமாக பெற முடியும்.
மத்திய பாஜக அரசு, ஆயுஷ் மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018ல் துவங்கியது. தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தி வரும் இந்த திட்டம் வாயிலாக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை ஒவ்வொரு ஆண்டும் 12 கோடி குடும்பங்கள் பெற்று வருகின்றன.
திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து இதுவரை 6.2 கோடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு 79,157 கோடி ரூபாய் சிகிச்சை செலவாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காப்பீட்டு தொகையை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக தீவிர நோய்களாக கருதப்படும் புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் இலவச சிகிச்சை பெற முடியும்.
அதாவது 10 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை இதன் வாயிலாக பெறமுடியும். இதற்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி 1ல் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது மட்டுமின்றி ஆயுஷ்மான் திட்டத்தில் கிஷான் சம்மன் நிதி பெறும் விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கம் அல்லாத தொழில் செய்பவர்கள், ஆஷா சுகாதார ஊழியர்கள் ஆகியோரை அடுத்த மூன்று ஆண்டுகளில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக இந்த திட்டத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கை 100 கோடியாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.