நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ முன் வரவேண்டும் என வலியுறுத்தினார்.
இஸ்ரேலுக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கர அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் ஒவ்வொன்றையும் குறி வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதில் பல நாடுகளின் கப்பல்கள் சேதமடைந்தன.
இந்த சூழ்நிலையில் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து அதிபர் இப்ராஹிம் ரெய்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி மனிதநேய அடிப்படையில் பாலஸ்தீனியர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தலையிட்டு தகுந்த தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.