சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 19) தொடங்கி வைத்தார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் (ஜனவரி 19) சென்னை வருகை தந்தார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழி நெடுகிலம் பாஜக தொண்டர்கள் கரகோஷத்துடன், தமிழக பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து கேலோ இந்தியா போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த போட்டி ஜனவரி 23ஆம் தேதி துவங்கி ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெறுகின்றன. அதில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஆக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் நம்நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பகுதிகளிலிருந்து 18 வயதிற்குட்பட்ட வயதுப்பிரிவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்கள் விளையாட்டு ஆர்வலர்களுக்கு வசதியாக இணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.