‘‘கேலோ இந்தியா’’ விளையாட்டு கிராமங்கள், ஏழைகள், பழங்குடியினர், கீழ்தட்டு நடுத்தர மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (ஜனவரி 19) இப்போட்டியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
வணக்கம் சென்னை,
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, முதல்வர் எம்.கே. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாகுர் அவர்களே, எல். முருகன் அவர்களே, நிஷித் பிரமாணிக் அவர்களே, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே, மேலும் பாரதத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் இங்கே வந்திருக்கும் என்னுடைய இளைய நண்பர்களே,
நான் அனைவரையும் 13வது கேலோ இந்தியா விளையாட்டுக்களுக்கு வரவேற்கிறேன். நமது நாட்டின் விளையாட்டுக்களைப் பொறுத்த மட்டிலே, 2024ஆம் ஆண்டினைத் துவக்க இது அருமையான வழியாகும். இங்கே குழுமியிருக்கும் என்னுடைய இளைய நண்பர்கள் தாம் ஒரு புதிய இந்தியா, ஒரு இளம் இந்தியாவின் பிரதிநிதிகள். உங்களுடைய ஆற்றலும், உற்சாகமும் விளையாட்டு உலகிலே தேசத்தைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது.
நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் அனைத்து தடகள வீரர்களுக்கும், விளையாட்டு அபிமானிகளுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் இணைந்து, நீங்கள் ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் மெய்யான உணர்வினைக் காட்சிப்படுத்துகிறீர்கள்.
தமிழர்களின் இதமான வரவேற்பு, அழகிய தமிழ் மொழி, கலாச்சாரம், உணவு ஆகியன உங்கள் வீட்டில் நீங்கள் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு அளித்திருக்கும். தமிழர்களின் விருந்தோம்பல் உங்கள் இதங்களைக் கொள்ளை கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேலோ இண்டியா இளைஞர் விளையாட்டுக்கள் உங்கள் திறன்கள்-திறமைகளைக் காட்சிப்படுத்த உங்களுக்குக் கண்டிப்பாக ஒரு வாய்ப்பை அளிக்கும்.
அதே நேரத்தில், வாழ்நாள் முழுக்க நீடிக்க கூடிய புதிய நட்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
நண்பர்களே, இன்று இங்கே தூர்தர்ஷன் மற்றும் ஆகாசவாணியின் பல நிகழ்ச்சிகளின் தொடக்கமும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற இருக்கின்றன.
1975ஆம் ஆண்டும் முதல் ஒளிபரப்பைத் தொடக்கிய சென்னை தூர்தர்ஷன், இன்று ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.
இன்று இங்கே டிடி தமிழ் சேனலும் கூட புதிய வடிவம் பெற்று தொடங்கப்பட இருக்கிறது.
8 மாநிலங்களில், 12 புதிய பண்பலை ஒலிபரப்பிகள் தொடங்கப்படுவதால், கிட்டத்தட்ட ஒண்ணரை கோடி மக்களுக்கு ஆதாயமாக இருக்கும்.
இன்று 26 புதிய பண்பலை ஒலிபரப்பிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நான் தமிழ்நாட்டு மக்களுக்கும், நாட்டுமக்களுக்கும் இதன் பொருட்டு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, பாரதத்தில் விளையாட்டுக்களின் மேம்பாட்டில் தமிழ்நாட்டிற்கென ஒரு சிறப்பிடம் உண்டு. இது சேம்பியன்களை உருவாக்கும் பூமி.
இந்த மண்ணில் தான் டென்னிஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த அமிர்தராஜ் சகோதரர்கள் பிறந்தார்கள்.
இதே மண்ணில் தான் ஹாக்கி அணியின் கேப்டன் பாஸ்கரனும் பிறந்தார், இவருடைய தலைமையின் கீழ் தான் பாரதம் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்க பதக்கத்தை வென்றது.
சதுரங்க விளையாட்டின் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பிரஞ்யாநன்ந்த், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் சேம்பியனான மாரியப்பன் ஆகியோரும் கூட தமிழ் மண்ணின் மைந்தர்கள் தாம்.
இப்படிப்பட்ட எத்தனையோ விளையாட்டு வீரர்கள் இந்த மண்ணிலிருந்து தோன்றியிருக்கிறார்கள், ஒவ்வொரு விளையாட்டிலும் செயற்கரிய செயலைச் செய்து காட்டியிருக்கிறார்கள்.
நீங்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டின் மண்ணிலிருந்து உத்வேகம் அடைவீர்கள் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, நாமனைவரும் பாரதத்தைக் உலகின் தலைசிற்ந்த விளையாட்டு நாடுகளில் ஒன்றாகக் காண விழைகிறோம்.
இதன் பொருட்டு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தேசம் தொடர்ந்து பெரியபெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், விளையாட்டு வீரர்களின் அனுபவத்தை அதிகப்படுத்த வேண்டும், அடித்தளத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பெரிய போட்டிகளில் விளையாட வர வேண்டும்.
கேலோ இண்டியா இயக்கமானது, இன்று இந்த பங்களிப்பையே நிறைவேற்றி வருகிறது.
2018ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 12 கேலோ இண்டியா விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
கேலோ இண்டியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள், கேலோ இண்டியா பனிக்கால விளையாட்டுக்கள் மற்றும் கேலோ இண்டியா மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், விளையாடவும் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது, புதிய திறன்கள் முன்னிறுத்தவும்படுகிறார்கள்.
இப்போது மீண்டும் ஒருமுறை, கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்கள் நல்லமுறையில் தொடங்கப்பட இருக்கின்றன.
சென்னை, திருச்சி, மதுரை, கோயமுத்தூர், என தமிழ்நாட்டின் நான்கு அருமையான நகரங்களிலும் நம்முடைய சேம்பியன்களை வரவேற்க தயாராக இருக்கின்றார்கள்.
நண்பர்களே, விளையாட்டு வீரராகட்டும், பார்வையாளராகட்டும், அனைவரும் சென்னையின் அழகான கடற்கரைகள் உங்களைக் கொள்ளை கொண்டு விடும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
மதுரையின் ஈடில்லாத ஆலயங்களின் மகோன்னதத்தை அனுபவிப்பீர்கள்.
திருச்சியின் ஆலயங்கள், அங்கே இருக்கும் கலையும், கைவினைத்திறனும் உங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்டு விடும்.
இதோடு கோயமுத்தூரின் உழைப்பாளர்கள், தொழில்முனைப்புடையோர் உங்களை திறந்த மனத்தோடு வரவேற்பார்கள்.
தமிழ்நாட்டின் இந்த அனைத்து நகரங்களிலும் உங்களுக்கு ஒரு திவ்வியமான அனுபவம் ஏற்படும், இதை உங்களால் மறக்க முடியாது.
நண்பர்களே, கேலோ இண்டியா விளையாட்டுப் போட்டிகளின் போது 36 மாநிலங்களின் தடகள வீர்கள் தங்கள் திறமைகளையும், தன்முனைப்பையும் காட்சிப்படுத்துவார்கள்.
5000த்திற்கும் மேற்பட்ட இளைய விளையாட்டு வீரர்கள் தங்களுடைய விடாமுயற்சி, தங்களுடைய உற்சாகம் ஆகியவற்றோடு மைதானத்தில் இறங்கும் போது இங்கே என்ன சூழல் நிலவும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்!!
வில்வித்தை, தடகள விளையாட்டு, பேட்மிண்டன் போன்ற விளையாட்டுப் போட்டிகளின் ஆனந்தத்திற்காக காத்திருக்கிறோம்.
கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஸ்க்வாஷ் விளையாட்டில் வெளிப்படும் உற்சாகத்தைக் காண ஆவலோடு இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் பண்டைய கௌரவம் மற்றும் மரபுசார் விளையாட்டின் சின்னமான சிலம்பத்தைக் காண ஆர்வம் பொங்குகிறது.
பல்வேறு மாநிலங்களில், பல்வேறு விளையாட்டு வீரர்கள் ஒரே சங்கல்பம், ஒரே தன்முனைப்பு, ஒரே உணர்வுடன் கூட இங்கே ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
விளையாட்டுக்களின்பால் அர்ப்பணிப்புணர்வு, அவர்களின் தன்னம்பிக்கை, இடர்களைக் கடக்க முடியும் என்ற திடமான உணர்வு, அசாதாரணமான வெளிப்பாடு என்ற தாகம் ஆகியவற்றை நாடு முழுவதும் காணும்.
நண்பர்களே, தமிழ்நாட்டின் மகான் திருவள்ளுவர் பிறந்த மண் இது. புனிதர் திருவள்ளுவர் தன்னுடைய படைப்புக்களின் வாயிலாக இளைஞர்களுக்கு புதிய திசையைக் காட்டினார், அவர்கள் முன்னேற கருத்தூக்கம் அளித்தார்.
கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களின் சின்னத்திலுமே கூட மகான் திருவள்ளுவரின் முகத்தைக் காண முடியும். புனிதர் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார்,
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்,
பெருமை முயற்சி தரும். அதாவது, விபரீதமான சூழ்நிலைகளிலும் கூட நாம் பலவீனப்பட்டுவிடக் கூடாது, நாம் கடினங்களைக் கண்டு ஓடி ஒளியக் கூடாது.
நாம் நமது மனத்தை உறுதியாக வைத்துக் கொண்டு இலக்கை சாதிக்க முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். ஒரு விளையாட்டு வீரருக்கு இது மிகப்பெரிய உத்வேகமாகும்.
இந்த முறை கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக வீரமங்கை வேலு நாச்சியார் ஆக்கப்பட்டிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
நிஜ வாழ்க்கையைச் சார்ந்த ஒருவர் சின்னமாக ஆக்கப்பட்டிருப்பது, இதுவரை அறியப்படாத ஒன்று.
வீரமங்கை வேலு நாச்சியார், பெண்சக்தியின் அடையாளம்.
இன்று, அரசின் பல முடிவுகளில் அவருடைய ஆளுமை பிரதிபலிக்கிறது.
அவருடைய கருத்தூக்கத்தால் தான் அரசு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் கூட அதிகாரப்பங்களிப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
கேலோ இண்டியா இயக்கத்தின்படி 20 விளையாட்டுக்களில் பெண்களின் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதிலே 50,000 விளையாட்டு வீராங்கனைகள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
தஸ் கா தம் போன்ற முன்னெடுப்பிலும் கூட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் தங்களுடைய திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.
நண்பர்களே,
திடீரென்று 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு எப்படி நம்முடைய தடகள விளையாட்டுக்களில் செயல்பாடு இத்தனை சிறப்பானதாக ஆகியிருக்கிறது என்று இன்று பலருக்குத் திகைப்பாக இருக்கலாம்.
பாரதம் டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுக்களிலும் இதுவரை காணாத அளவுக்கு சிறப்பான செயல்பாட்டினைத் செய்திருப்பதை நீங்களே கவனித்திருக்கலாம்.
ஆசிய விளையாட்டுக்களிலும் ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுக்களிலும் கூட பாரதம் சரித்திரம் படைத்திருக்கிறது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளிலுமே கூட பாரதம் பதங்கங்கள் விஷயத்தில் புதியதோர் சாதனையைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் திடீரென்று நிகழ்ந்து விடவில்லை.
தேசத்தின் விளையாட்டு வீரர்களின் கடும் உழைப்பும், பேரார்வமும் முன்காலத்திலும் ஒன்று சளைத்திருக்கவில்லை.
ஆனால் கடந்த பத்தாண்டுகளிலே, அவர்களுக்கு புதியதோர் தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது, ஒவ்வொரு அடியிலும் அரசு அவர்களுக்கு துணை நின்றது.
முந்தைய போட்டிகளில் எப்படி விளையாட்டுக்கள் அரங்கேற்றப்பட்டனவோ, அந்த வழிமுறைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்தோம்.
கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கம் சீர்திருத்தம் மேற்கொண்டது, விளையட்டு வீரர்கள் செயல்பட வைத்தது, விளையாட்டுக்களின் ஒட்டுமொத்த அமைப்பிலும் மாற்றமேற்படுத்தியது.
இன்று கேலோ இண்டியா இயக்கம் வாயிலாக தேசத்தின் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டில் நாம் டாப்ஸ் அதாவது ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் என்ற ஒன்றை தொடக்கினோம்.
இதன் வாயிலாக தலைசிறந்த தடகள பயிற்சி, சர்வதேச அளவிலான அனுபவம், பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் அவர்களுடைய பங்கேற்பை உறுதிப்படுத்தினோம்.
இப்போது நம்முடைய பார்வை இந்த ஆண்டு பாரீஸ் நகரில்ஜும், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்ஜெலஸில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் மீதே இருக்கிறது.
இதற்காகவும் கூட டாப்ஸ் திட்டத்தின்படி, விளையாட்டு வீரர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.
நண்பர்களே,
இன்று விளையாட்டுக்கள் இளைஞர்களின் வருகைக்காக காத்திருப்பதில்லை, நாம் விளையாட்டுக்களை இளைஞர்களிடமே கொண்டு செல்கிறோம்.
நண்பர்களே,
கேலோ இண்டியா போன்ற இயக்கம், கிராமங்கள், ஏழைகள், பழங்குடியினர், கீழ்தட்டு நடுத்தர மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது. இன்று நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் எனும் போது, இதிலே விளையாட்டுத் திறன்களும் அடங்கும்.
இன்று நாம் உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்காக மிகச் சிறப்பான வசதிகளையும், நல்ல போட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகிறோம்.
இதன் வாயிலாக இவர்களுக்கு சர்வதேச அளவில் ஒரு நேரடி அனுபவம் கிடைக்கிறது.
கடந்த பத்தாண்டுகளிலே இப்படி பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை முதன்முறையாக பாரதத்திலே அமைத்தளித்திருக்கிறோம்.
தேசத்தின்வசம் இத்தனை பெரிய கரையோரப் பகுதி இருக்கின்றன, இத்தனை அதிக அளவில் பீச்சுகள் இருக்கின்றன.
இருந்தாலும் கூட, இப்போது தான் முதன்முறையாக தீவ் தீவிலே பீச் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் மல்லகம்பம் போன்ற பாரம்பரியமான இந்திய விளையாட்டுக்களோடு கூடவே 8 விளையாட்டுக்களும் இடம் பெற்றிருக்கின்றன.
நாடெங்கிலுமிருந்தும் 1600 விளையாட்டு வீரர்கள் இதிலே போட்டியிட்டார்கள்.
இதன் காரணமாக, பாரதத்தின் கடற்கரை விளையாட்டுக்களுக்கும், விளையாட்டுச் சுற்றுலாவுக்கும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதனால் நம்முடைய கரையோர நகரங்களுக்கும் பெரும் ஆதாயம் ஏற்படும்.
நண்பர்களே,
நம்முடைய இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நேரடி அனுபவம் கிடைக்க வேண்டும், உலக விளையாட்டு சூழலமைப்பின் மையமாக பாரதம் ஆக வேண்டும் என்பதே நம்முடைய உறுதிப்பாடு.
ஆகையால், நாம் 2029ஆம் ஆண்டிலே இளைஞர்களுக்கான ஒலிம்பிக்ஸ் மற்றும் 2036ஆம் ஆண்டிலே ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகியவற்றை பாரதத்திலே நடத்த முழு முயற்சியை மேற்கொண்டு பணியாற்றி வருகிறோம்.
விளையாட்டுக்கள் களத்தோடு மட்டுமே நின்று போவதில்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.
மாறாக விளையாட்டுக்கள் என்பவை தாமே ஒரு மிகப்பெரிய பொருளாதாரமாகும்.
இதிலே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஆக்கும் உத்திரவாதத்தை நான் அளித்திருக்கிறேன்.
இந்த உத்திரவாதத்தில் விளையாட்டுக்கள் சார்ந்த பொருளாதாரத்தின் பங்களிப்பும் அதிகரிக்க வேண்டும் என்பதே நம்முடைய முயற்சி.
அந்த வகையிலே கடந்த பத்தாண்டுகளில் நாம் விளையாட்டுக்களோடு தொடர்புடைய பிற துறைகளையும் கூட மேம்படுத்தி வருகிறோம்.
இன்று தேசத்தில் விளையாட்டுக்களோடு தொடர்புடைய தொழில் வல்லுநர்களை உருவாக்கும் பொருட்டு, திறன் மேம்பாடு தொடர்பாகவும் பலம் அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு புறத்தில், விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் சேவைகளோடு தொடர்புடைய சூழலமைப்பையும் கூட மேம்படுத்தி வருகிறோம்.
தேசத்திலே விளையாட்டு அறிவியல், புதுமைகள் கண்டுபிடிப்பு, தயாரிப்பு, விளையாட்டு பயிற்றுவித்தல், விளையாட்டு உளவியல், விளையாட்டு ஊட்டச்சத்து போன்றவற்றோடு தொடர்புடைய தொழில் வல்லுநர்களுக்கு நாம் தளமைத்துக் கொடுக்கிறோம்.
கடந்த ஆண்டுகளில் தேசத்தில் முதன்முறையாக தேசிய விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இன்று கேலோ இண்டியா இயக்கத்தின் வாயிலாக, தேசத்தில் 300க்கும் மேற்பட்ட பிரபலமான கழகங்கள் உருவாகி விட்டன. ஓராயிரம் கேலோ இண்டியா மையங்கள், 30க்கும் மேற்பட்ட தனிச்சிறப்பு மையங்கள் இணைந்திருக்கின்றன.
தேசத்தின் புதிய தேசிய கல்வித் திட்டத்தில் நாம் விளையாட்டுக்களை முக்கிய பாடத்திட்டத்தின் அங்கமாக ஆக்கியிருக்கிறோம்.
இதன் காரணமாக, விளையாட்டுக்களை ஒரு வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வு சிறுவயது தொடங்கியே வருகிறது.
நண்பர்களே,
வரவிருக்கும் சில ஆண்டுகளிலேயே பாரதத்தின் விளையாட்டுத் தொழில்துறை, கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி ரூபாயாகி விடும் என்று அனுமானிக்கப்படுகிறது.
இதனால் நேரடி ஆதாயம் அடையப்போவது நம்முடைய இளைய நண்பர்கள் தாம்.
கடந்த ஆண்டுகளிலே விளையாட்டுக்கள் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் இந்த புதிய விழிப்புணர்வு காரணமாக, ஒலி-ஒளிபரப்பு, விளையாட்டுப் பொருட்கள், விளையாட்டுச் சுற்றுலா, விளையாட்டு ஆடைகள் போன்ற தொழில்களிலும் கூட விரைவான முன்னேற்றம் நடந்து வருகிறது.
விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தலிலும் கூட பாரதம் தற்சார்புடையதாக ஆக வேண்டும் என்பதே நம்முடைய முயற்சியாகும்.
இன்று நாம் 300 வகையான விளையாட்டுக் கருவிகளைத் தயாரித்து வருகிறோம்.
தேசத்தின் பல்வேறு பாகங்களில் இதோடு தொடர்புடைய தயாரிப்புத் தொகுதிகள் நிறுவப்பட வேண்டும் என்பதே நம்முடைய முயற்சியாகும்.
நண்பர்களே,
கேலோ இண்டியா இயக்கத்தின்படி, நாடெங்கிலும் உருவாகிவரும் விளையாட்டுத் துறை கட்டமைப்புகளும் கூட வேலைவாய்ப்புக்கான பெரிய ஊடகமாக ஆகி வருகின்றன.
இன்று பல்வேறு விளையாட்டுக்களோடு தொடர்புடைய லீகுகள் விரைவாக பெருகி வருகின்றன. இதனாலும் கூட பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
அதாவது நமது இளைய பள்ளி-கல்லூரி மாணவமாணவியர், விளையாட்டுக்கள் தொடர்பான துறைகளில் தங்களுடைய எதிர்காலத் தொழில்பாதையை அமைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்திற்கு மோதியின் உத்திரவாதம் உண்டு.
நண்பர்களே,
இன்று விளையாட்டுக்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு துறையிலுமே பாரதத்தின் பெயர் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
புதிய பாரதம் பழைய பதிவுகளுக்கு முடிவு கட்ட, புதிய உறுதிப்பாடு, புதிய கற்பனை, புதிய உயரங்களைத் தொட நடைபோடத் தொடங்கி விட்டது.
நமது இளைஞர்களின் திறமைகளின் மீதும், உங்களுடைய வெற்றி மீதான தாகத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
உங்களுடைய மனவுறுதிப்பாடு மற்றும் மனோசக்தியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய பாரதத்தில் பெரிய இலக்குகளை நிர்ணயிக்கவும் அதை சாதித்துக் காட்டவும் திறமை இருக்கிறது.
நம்மால் தகர்க்க முடியாத எந்தவொரு சாதனையும் கிடையாது. இந்த ஆண்டு, நாம் புதிய பதிவுகளை ஏற்படுத்துவோம், நமக்காகவும் சரி, உலகிற்காகவும் சரி புதிய வரையறைகளை நிர்ணயிப்போம்.
நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும், ஏனென்றால் உங்களோடு தான் பாரதம் பயணிக்க வேண்டும்.
ஒன்று சேருங்கள், நீங்களும் வெல்லுங்கள், தேசத்தையும் வெற்றி பெறச் செய்யுங்கள். மீண்டும் ஒரு முறை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
நன்றிகள்!!
நன்றி: ஆல் இந்தியா ரேடியோ சென்னை