தேவாலய நிதி தகராறில், பாதிரியார் இல்லத்தில் அரசு ஊழியர் படுகொலை.. தலைமறைவான திமுக ஒன்றிய செயலாளர்!

தேவாலய நிதி தொடர்பான தகராறில் அரசு போக்குவரத்து ஊழியர் சேவியர் குமார் பாதிரியார் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (45), கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்குப்பேரவையில் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமிலா, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்.

இந்த நிலையில், சேவியர் குமாருக்கும், தற்போதுள்ள பங்கு பேரவை தரப்பினருக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இரண்டு தரப்பினரும் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சேவியர் குமார் பங்கு நிர்வாகத்திற்கு எதிராக கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே ஜெமிலாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெமிலா மீண்டும் பணியில் சேர முயற்சி மேற்கொண்டார். அப்போது தனது கணவர் இனி இதுபோன்று சமூக வலைதளங்களில் பதிவிட மாட்டார் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசுவதற்காக நேற்று முன்தினம் சேவியர் குமார் மைலோடு ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அங்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் சேவியர்குமார் இஸ்திரி பெட்டி, பூந்தொட்டியால் தாக்கி கொல்லப்பட்டார். அங்கிருந்து பாதிரியார் உட்பட அனைத்து குற்றவாளிகளும் தலைமறைவாகி விட்டனர்.

குற்றவாளிகளை கைது செய்தால்தான் உடலை எடுக்க விடுவோம் என கூறி நாம் தமிழர் கட்சியினர் மற்றும் உறவினர்கள் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாலை 1.45 மணிக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சேவியர்குமார் மனைவி ஜெமிலா, காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், நாங்கள் மயிலோடு ஆலயத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். உறுப்பினர் என்ற முறையில் வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக என் கணவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். இதுதொடர்பாக புகார் அளித்தும் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு அழைத்து என் கணவரை கொன்று விட்டனர்.

எனவே, என் கணவரை தாக்கி கொலை செய்த விவகாரத்தில் மைலோடைச் சேர்ந்த ரமேஷ் பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன், ஜஸ்டஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெலிஸ், பெனிட்டோ மற்றும் மேலும் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அதன்பேரில் ரமேஷ் பாபு உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ரமேஷ் பாபு தி.மு.க. ஒன்றிய செயலாளராகவும், ராபின்சன், பெனிட்டோ ஆகிய 2 பேரும் பாதிரியாராகவும் உள்ளனர். தலைமறைவான குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் செயல்படும் போலீசார், சந்தேக நபர்களை எளிதாக தப்பிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்னையில் பட்டியல் சமூதாய இளம்பெண் ஒருவர் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ.வின் மகனும் மருமகளும் தலைமறைவாகச் சென்றதை போன்று மற்றொரு வழக்காக கன்னியாகுமரி கொலை வழக்கு வந்துள்ளது.

தற்போது கொலையாளிகளில் ஒருவர் திமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரை போலீசார் இதுவரையில் கைது செய்யாமல் உள்ளது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக போலீசார் நடந்து கொள்வதாகவும் சேவியர் குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top