கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2024) 2024–25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6வது பட்ஜெட் ஆகும். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024–25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024–25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், “கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. வளர்ச்சியின் பயன்கள் ஏழை, எளிய மக்களை அடையத் தொடங்கியுள்ளன. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் மீண்டும் வலுவான பெரும்பான்மையுடன் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள்.

சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுகிறோம். சமூக நீதி என்பது அரசின் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்தி வருகிறோம். நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் வங்கி கணக்கு, அனைவரும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம்.

2047ல் புதிய இந்தியாவை படைப்போம். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027ல் நனவாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் 2014–க்கு முந்தைய காலகட்டத்தின் ஒவ்வொரு சவாலும் முறியடிக்கப்பட்டது என்று பேசினார்.

பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஒரு கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம். இதன்மூலம் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம்.

அடுத்த 5 ஆண்டுகளில்  பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது, முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

பலமுனை பொருளாதார நிர்வாக மேம்பாடு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மகளிர் தொழில் முனைவோருக்கு 30 கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

உயர்கல்வி பயலும் மாணவர்களின் எண்ணிக்கை 28% சதவீதம் உயர்ந்துள்ளது.

விமான நிலைய விரிவாக்கப் பணிகள், மெட்ரோ ரயில், நமோ பாரத் ரயில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் தொடரும்.

வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள், முறைப்படுத்தப்படாத காலனிகள் போன்றவற்றில் வசிக்கும் நடுத்தர பிரிவை சேர்ந்த மக்கள் சொந்த வீடு கட்டு வதற்கு விரைவில் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு, ஒரே தேசம், ஒரே சந்தைக்கு வழிவகுத்துள்ளது. அனைத்துத்தரப்பு வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வரி அடிப்படையிலான வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி உத்வேகம் அளிக்கிறது.

மொத்தமாக 43 கோடி முத்ரா கடன்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. மிக அதிகமான பணவீக்க தருணத்தில் ஜி20 வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தனிநபர் சராசரி வருமானம் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கம் மூலம் வரி கட்டமைப்பு நெறிப்படுத்தப்பட்டு வரிவருமானம் அதிகரித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகள் வளர்ச்சிக்கான ஆண்டுகளாக அமையும். ஊரகப் பகுதிகளில் 70 சதவீத வீடுகள் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயாராகி வருகிறது.

நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும்

ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.

கர்ப்பப்பை கேன்சரை தடுக்க 9 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஆஷா, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டம் விரிவுப்படுத்தப்படும், இதனால் அங்கன்வாடி பணியாளர்களும் ரூபாய் பத்து லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.

பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் 41 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திற்கு உயர்த்தப்படும்.

சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்.

நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்கள் வாங்க உள்ளன.

உதான் திட்டத்தில் புதிதாக 517 தடங்களில் மலிவு விலை விமான சேவை துவங்க திட்டம்.

லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

2023–24ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி அரசின் செலவு ரூ.40.90 லட்சம் கோடி.

2024–2025ல் நாட்டின் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

2025–26ம் ஆண்டிற்குள் நிதி பற்றாக்குறை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க திட்டம்.

10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது.

பாதுகாப்புத்துறையில் முதலீடு 11.1 சதவீதமாக உயர்த்தி 11,11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.

பாதுகாப்புத்துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜிடிபி.,யில் 3.4 சதவீதமாக இருக்கும்.

7 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும்.

சுற்றுலா மையங்களை மேம்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன்.

கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 7 ஐ ஐ டிகள் 7 ஐ ஐ எம் மற்றும் 15 எய் ம் ஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், இளைஞர் நலன் மற்றும் விவசாயிகளின் நலம் ஆகிய நான்கு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது கோடி பெண்கள் பங்கேற்கும் 83 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கிராமப்புறங்கள் சமூக பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்துள்ளது. இதன் மூலம் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்கள் லட்சாதிபதி ஆகியுள்ளனர்.

வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்தவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையை தொடரும்.

நிதியமைச்சரின் இந்த பட்ஜெட் உரை 57 நிமிடங்கள் நீடித்தது. இடைக்கால பட்ஜெட்டை பிரதமர் மோடி உட்பட முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top