‛கனவாக இருந்த ராமர் கோயிலை, பிரதமர் நரேந்திர மோடி நிஜமாக்கினார்’ என மக்களவையில் ராமர் கோவில் தொடர்பாக நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மக்களவையில் ராமர் கோவில் கட்டுமானம் மற்றும் கும்பாபிஷேகம் மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை பாஜக எம்.பி., சத்யபால் சிங் துவக்கி வைத்து பேசினார். பல கட்சி எம்.பி.,க்கள் இந்த விவாதம் மீது பேசினர்.
இதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவாதத்தின் மீது பேசியதாவது:
ராமர் கோவில் இயக்கத்தை புறக்கணித்து நாட்டின் வரலாற்றை யாரும் படிக்க முடியாது. 1528 முதல் ஒவ்வொரு தலைமுறையும் இந்த இயக்கத்தை ஏதோ ஒரு வடிவில் பார்த்தது. ராமர் கோவில் என்பது கனவாக இருந்தது. ஆனால், அதனை மோடி அரசு நிஜமாக்கியது.
ஆயிரக்கணக்கான வரலாற்றில் ஜனவரி 22 முக்கிய இடம் பெறும். சிறந்த இந்தியாவிற்கான துவக்க நாளாக அமைந்துள்ளது. கோவிலுக்காக 1528 முதல் நடந்த போராட்டத்தையும், 1858 முதல் நடந்த சட்டப் போராட்டத்தையும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடித்து வைத்தது.
ராமர் கோவில் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காட்டியது. வேறு எங்கும் பெரும்பான்மை சமூகம் தனது நம்பிக்கைக்காக இவ்வளவு காலம் சட்டப்பூர்வமாக போராடியது இல்லை. ராமர் கோவில் கட்டுமானம் என்பது போராட்டத்தில் இருந்து பக்திக்கான பயணமாக இருந்தது.
ராமர் கோவில் கட்டுமானத்திற்காக நாங்கள் துணை நிற்போம் என பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க.,வும் உறுதியுடன் தெரிவித்தனர். பிரதமர் 11 நாட்களாக ராம பக்தியில் மூழ்கினார். ராமர் கோவில் குறித்து மக்களிடம் அத்வானி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மோடி நிஜமாக்கினார். மோடி இல்லாவிட்டால் ராமர் கோவில் கட்டுமானம் சாத்தியம் ஆகியிருக்காது. அமைதியான முறையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்தில் அரசியல் முழக்கம் இல்லை. அயோத்தி விமான நிலையத்திற்கு பல பெயர்களை சூட்ட பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், துறவி வால்மீகி பெயரை பிரதமர் தேர்வு செய்தார். அனைத்து சமூக மக்களையும் பிரதமர் மோடி அழைத்து செல்கிறார். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.