நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய உலகளாவிய தொழில் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
நாடாளுமன்ற முடிவு என்ன என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரவேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தெரிந்து கொண்டன. ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370ஐ நாங்கள் நீக்கினோம். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பா.ஜ.க.வுக்கு 370 தொகுதிகளில் வெற்றியை அளிப்பார்கள், தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என நம்புகிறேன்.
குடியுரிமை திருத்தச்சட்டம் 2019ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. விதிகள் வெளியிடப்பட்டப்பின் குடியுரிமை திருத்தச்சட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தூண்டப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் மதரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல.
பொதுசிவில் சட்டம் இந்தியாவின் முதல் பிரதமரால் கையெழுத்திடப்பட்ட இந்திய அரசியலமைப்பு நிரலில் உள்ளது. ஆனால், அரசியல் சமரசத்திற்காக பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தாமல் காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது. உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது சமூக மாற்றத்திற்கானது. பொதுசிவில் சட்டம் குறித்து அனைத்து நிலைகளிலும் ஆலோசிக்கப்பட்டு சட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். மதச்சார்பற்ற நாடு மத அடிப்படையிலான சிவில் சட்டங்களை கொண்டிருக்கக்கூடாது என்றார்.