விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘பாரத்’ என்ற பெயரில் கோதுமை மாவு, அரிசி விற்பனையை மத்திய அரசு செய்கிறது. அதேபோல், ‘பாரத் டால்’ என்ற பெயரில் கடலை பருப்பு அறிமுகம் செய்யப்பட்டு நாடு முழுதும் சராசரியாக மாதம் 45 ஆயிரம் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விளைச்சல் பாதிப்பால், உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிச்சந்தையில், கிலோ கோதுமை மாவு விலை 60 ரூபாயாக உள்ளது. பொன்னி பழைய அரிசி விலை 55 ரூபாயாக உள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு, ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் கிலோ கோதுமை மாவு 27.50 ரூபாய்க்கும், ‘பாரத் ரைஸ்’ என்ற பெயரில், கிலோ அரிசியை, 29 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது. இதற்காக தமிழகத்திற்கு மட்டும் 1,000 டன் கோதுமை மாவு, 22,000 டன் பாரத் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், ‘பாரத் டால்’ என்ற பெயரில் கடலை பருப்பையும் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஒரு கிலோ பாக்கெட் ரூ.60 வீதம் விற்கப்படும் இந்த பருப்பு, அறிமுகம் செய்யப்பட்டு நாடு முழுவதும் சராசரியாக மாதம் 45 ஆயிரம் டன் என இதுவரை 2.28 லட்சம் டன் விற்பனையாகியுள்ளன. 30 கிலோ எடை கொண்ட பை, கிலோ ரூ.55 என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த பாரத் அரிசி, பருப்பை விற்க, தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டகசாலை, கேந்திரிய பந்தர் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.