அரபிக்கல்லூரியில் ஐ.எஸ் பயங்கரவாத வகுப்புகள் : பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் கைது!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி உள்ள அரபிக்கல்லூரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க ரகசிய வகுப்புகள் நடத்தியது என்.ஐ.ஏ., விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு, கடந்த 2022 அக்டோபர் 23ல் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி, கோவை பொன்விழா நகரைச் சேர்ந்த முகமது உசேன் பைசி, குனியமுத்தூரைச் சேர்ந்த இர்ஷாத், மற்றும் ஜமீல் பாஷா உமரி ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களில் சையது அப்துல் ரகுமான் உமரி, கோவை அரபிக் கல்லூரியில் பேராசிரிய ராகவும், மற்றவர்கள் இவரிடம் மாணவர்களாகவும் இருந்துள்ளனர்.

இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் ஏற்கனவே உடற்பயிற்சிக் கூடங்கள் நடத்துவது போல ஆயுத பயிற்சி அளித்து வந்தது கண்டறியப்பட்டது. தற்போது, அரபிக் கல்லூரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், மாநிலம் முழுவதும் ரகசிய கூட்டங்கள் நடத்தி ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளனர்.

நிதி திரட்டுதல், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாகவும் வகுப்புகளை எடுத்துள்ளனர். ஒரு ஊருக்கு ஐவர்; அதில் ஒருவரை வழிநடத்தும் லீடராக நியமித்துள்ளனர்.

தொடர்புக்கு சங்கேத மொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். ஐ.எஸ்., அமைப்பு ரகசிய கூட்டங்கள், அரபிக் கல்லூரியில்தான் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விரிவான விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top