மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தகோரி, சந்தேஷ்காளி விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள் பட்டியலின மக்களின் நிலங்களை அபகரித்து ,பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.
. :
இதனையடுத்து வன்முறையில் தொடர்புடைய ,ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சந்தேஷ்காளியில் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிவதற்கு சந்தேஷ்காளிக்குச் சென்று விசாரணை நடத்திய, தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு கடந்த வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டது.
அதில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் உடல் ரீதியாகவும் சந்தேஷ்காளி பெண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய தேசிய மகளிர் ஆணையம், இவ்விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் கவனக்குறைவாகவும், உடந்தையாகவும் இருந்ததாக குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், சந்தேஷ்காளி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தேசிய பட்டியலின ஆணையம் தனது அறிக்கையை நேற்று (பிப்ரவரி 16) சமர்ப்பித்தது.
பட்டியலினத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 338வது பிரிவின் கீழ் ,மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக அதன் தலைவர் அருண் ஹல்தெர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், நாட்டிலேயே இரண்டாவது அதிகபட்ச பட்டியலினத்தவர் வசிக்கும் மேற்கு வங்க மாநிலத்தின் அரசு, பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்காமல் குற்றவாளிகளுடன் கைகோத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தச் சென்ற, அமலாக்கத்துறை அதிகாரிகளைத் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து ஷாஜஹான் ஷேக் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேஷ்காளி கிராம பெண்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க மத்திய அமைச்சர்கள் அன்னபூர்ணாதேவி, பிரதிமா பௌமிக் மற்றும் பாஜக எம்.பி.க்கள் மூத்த பெண் தலைவர்கள் அடங்கிய குழுவை தேசிய பாஜக தலைமை அறிவித்தது.
அதன்படி சந்தேஷ்காளிக்கு நேற்று (பிப்ரவரி 16) செல்ல முயன்ற இவர்களை, மாநிலப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் வீதியில் அமர்ந்து மம்தா ஆட்சியின் அலங்கோல ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் வரஉள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மம்தாவிற்கு மக்கள் சரியான பாடத்தை கற்ப்பிப்பார்கள் எனவும் கூறினர்.