‘அடுத்த 100 நாட்களில் புதிய உற்சாகத்துடனும், நம்பிக்கையுடன் பணியாற்றி, அனைவரின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும்’’ என பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது குறிப்பிட்டார்.
நாடு முழுவதிலும் இருந்து 11,500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்குபெறும் தேசிய பொதுக்குழுக்கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு வரஉள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், எவ்வாறு மத்திய அரசின்
திட்டங்களை மக்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய பொதுக்குழுவில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
*நாட்டிற்காக பா.ஜ.க., தொண்டர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். தொண்டர்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது. தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும்
*அடுத்த 100 நாட்கள் புதிய உற்சாகத்துடனும், புதிய நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். புதிய வாக்காளர்கள், மத்திய அரசின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள், அனைத்து சமூகத்தினரின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.
* இன்று (பிப்.,18) 18 வயதாகும் இளைஞர்கள், நாட்டின் 18 வது லோக்சபாவை தேர்வு செய்யப் போகின்றனர்.
*தற்போது நமது நாட்டின் கனவும், தீர்மானமும் மிகப்பெரியது. நமது கனவும், தீர்மானமும், நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும். அதற்கு அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்.
*தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என எதிர்க்கட்சிகள் கூட பேசுகின்றன. இது சாத்தியமாக பாஜ.க., 370 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
*நிறைய சாதனை செய்துள்ளீர்கள், பெரிய வாக்குறுதி அளித்துள்ளீர்கள் என மக்கள் கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்தது சாதாரண விஷயம் அல்ல. நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளோம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பாடுபட்டு உள்ளோம்.
*இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரித்து உள்ளன.
*10 ஆண்டு கால எனது ஆட்சியில் ஊழல் இல்லை. மிகப்பெரிய ஊழல்கள், பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டு உள்ளது.
*அதிகாரத்தை அனுபவிக்க 3வது முறையாக பிரதமர் பதவியை கேட்கவில்லை. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் வாழ்கிறேன். கோடிக்கணக்கான ஏழைகள் பெண்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகள் தான் மோடியின் தீர்மானம்.
*பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டோம். அயோத்தி ராமர் கோவில் கட்டியதன் மூலம் 500 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
*பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்தோம். இதனை விரைவாக கையாள, சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
*செங்கோட்டையில் கழிப்பறை பற்றி பேசிய முதல் பிரதமர் நான் தான்.
*கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
*பெண்கள் கல்வி மற்றும் அதிகாரமளித்தலுக்கு முக்கியத்துவம் அளித்தோம்
*பாஜ.க., ஆட்சியில் 5 கோடி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது
*ஆயுதப்படைகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தோம்.
*பேறு கால விடுப்பு 6 மாத காலமாக அதிகரிக்கப்பட்டது.
*ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் கிடைப்பதை உறுதி செய்தோம்.
*பாஜ.க., திட்டங்களில் பெண்கள் பலனடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
*நாடு 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2047 ல் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற ஒரு இயக்கமாக பணியாற்றி வருகிறோம். நாட்டை 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற தீர்மானம் கொண்டு வந்து உள்ளோம். இதுதான் மோடியின் தீர்மானம்.
*வளர்ந்த நாடு என்பது நமது லட்சியம். நமது நோக்கம். இந்தியா வளர்ந்த நாடு என்பதை பற்றி யாரும் சிந்தித்தது கிடையாது. அதனை நாங்கள் செய்கிறோம். தேஜ கூட்டணி மட்டுமே சிந்தித்தது.
*இந்தியா பெரிய இலக்குகளை நிர்ணயித்து உள்ளது. இதனால் பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதற்காக பணியாற்றி வருகிறோம்.
*எதிர்காலத்தில், நாம் கச்சா எண்ணெய் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருக்காது.
*சாதனை படைக்கும் வகையில் பல்கலைகள், மருத்துவமனைகள், சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
*செமி கண்டக்டர் துறையில் இந்தியா உலக நாடுகளின் மையமாக மாறி வருகிறது.
*புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ந்து வரும் துறையாக உள்ளது.
*விவசாயிகள் பலன் அடைய அயராது பாடுபட்டு வருகிறோம்.
*நமது நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலரை எட்ட 60 ஆண்டுகள் ஆனது. 2014ல் நாம் ஆட்சிக்கு வந்த போது, 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு என்பது கடினமானதாக இருந்தாலும்,10 ஆண்டுகளில் கூடுதலாக 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றினோம்.
*2014ல் 11வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்தது. ஆனால்,10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு கொண்டு வந்தோம்.
*2014ல் நான் பதவி ஏற்ற போது, மாநிலத்திற்கு வெளியே மோடிக்கு என்ன அனுபவம் உள்ளது என விமர்சனம் செய்தனர். வெளியுறவு கொள்கை குறித்து கேட்டனர். சமீபத்தில் யுஏஇ மற்றும் கத்தார் சென்றேன். பல நாடுகளுடன் நமது உறவு எப்படி வலுவாக உள்ளது என உலக நாடுகள் பார்க்கின்றன. வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத்தில், வெளிநாடுகளுடனான நமது உறவு வலுவாக உள்ளது.
*5 அரபு நாடுகள், அவர்களது நாட்டின் உயரிய விருதை எனக்கு அளித்துள்ளன. இது மோடிக்கு மட்டும் கிடைத்த பெருமை அல்ல.140 கோடி மக்களுக்கும் கிடைத்த பெருமை.
*எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை மட்டும் அளிக்கின்றன. ஆனால் அவர்களை போல் நாம் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பது கிடையாது. வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது.
*காங்கிரசிடம் இருந்து நாட்டின் எதிர்காலத்தை காக்க வேண்டும். தனக்காக மட்டும் பேசும் வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அக்கட்சி ஊழல் நிறைந்தது. சமரச அரசியலில் ஈடுபடுகிறது. நமது முப்படைகளை அவமரியாதை செய்தது. சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து சந்தேகம் எழுப்பியது. நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது. ஜாதி ரீதியாக பிரிக்க நினைக்கிறது. மிகவும் குழப்பம் வாய்ந்த கட்சியாக உள்ளது.
*எச்ஏஎல் நிறுவனத்தை காங்கிரஸ் அழிக்க முயற்சித்தது. தற்போது அந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது.எனது நற்பெயரை கெடுக்க காங்கிரஸ் முயல்கிறது. என்னை விமர்சிப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் கொள்கை
*தேர்தல் இனிமேல் தான் நடைபெற உள்ளது. ஆனால், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தங்கள் நாட்டிற்கு வருமாறு பல வெளிநாடுகள் எனக்கு அழைப்பு விடுத்து உள்ளன. இதற்கு அர்த்தம் என்ன? பா.ஜ.க., அரசு தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என உலக நாடுகளும் நம்பிக்கை தெரிவித்து உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.