உலகுக்கு பல முன்னுதாரணங்களை பாரதம் நிர்ணயிக்கும் வகையில் காலச்சக்கரம் சுழன்றுள்ளது, என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், ‘கடவுள் ஸ்ரீ ராமர் ஆட்சி செய்தபோது, அவருடைய செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதுபோல, அயோத்தியில் பால ராமர் அரியணை ஏறியுள்ள நிலையில், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான பாரதத்தின் புதிய பயணம் தொடங்கியுள்ளது’ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் ஸ்ரீ கல்கி தாம் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (19.02.2024) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் பேசியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளான ஜனவரி 22-ஆம் தேதி ,நாட்டுக்கான புதிய காலச்சக்கரம் சுழலத் தொடங்கியது. கடவுள் ஸ்ரீ ராமர் ஆட்சி செய்தபோது, அவருடைய செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதுபோல, அயோத்தியில் பால ராமர் அரியணை ஏறியுள்ள நிலையில், அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான பாரதத்தின் புதியப் பயணம் தொடங்கியுள்ளது.
தற்போது, பாரதம் (இந்தியா) என்ற கோவிலை மீண்டும் கட்டும் பணியை கடவுள் எனக்குப் பணித்துள்ளார். ஒருபுறம் நமது புனிதத் தலங்கள் மறுசீரமைக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நகரங்கள் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை பெற்று வருகின்றன. கோவில்கள் கட்டப்பட்டு வரும் நேரத்தில் நாடு முழுவதும் ,புதிய மருத்துவக் கல்லூரிகளும் கட்டப்படுகின்றன.
நமது பழங்கால சிற்பங்கள் ,வெளிநாடுகளிலிருந்து மீட்டு கொண்டுவரப்படும் அதே வேளையில், சாதனை அளவில் வெளிநாட்டு முதலீடுகளும் பாரதத்திற்கும் வருகின்றன. காலச்சக்கரம் பாரதத்திற்கு சாதகமாக சுழன்றுள்ளது; புதிய சகாப்தம் நமது கதவுகளை தட்டுகின்றன என்பதற்கான சாட்சிதான் இந்த மாற்றங்கள்.
முதன் முறையாக, பிறரை பின்பற்றும் நாடாக அல்லாமல், பல முன்னுதாரணங்களை, உலகுக்கு நிர்ணயம் செய்யும் நிலைக்கு பாரதம் உயர்ந்துள்ளது. முதன் முறையாக, தொழில்நுட்பம் மற்றும் எண்ம தொழில்நுட்பத் துறைகளில் ,சாத்தியக்கூறுகளின் மையமாக பாரதம் பார்க்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக பாரதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக நாம் உருவெடுத்துள்ளோம். முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை அடைந்து சாதனை படைத்துள்ளோம்.
நாட்டின் 500 ஆண்டு கால காத்திருப்பு, அயோத்தி ராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை நிகழ்வு மூலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, அரபு மண்ணில் அபு தாபியில் மிகப் பெரிய ஹிந்து கோவில் திறந்து வைக்கப்பட்டது. இதே கால கட்டத்தில்தான் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில் புத்துயிர் பெற்றது. சோமநாத் கோவில் மற்றும் கேதார்நாத் கோவில் மறுசீரமைப்பையும் நாம் பார்த்தோம். அந்த வகையில் பாரம்பரியம் மாறாத, வளர்ச்சி மந்திரத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது நாடு பல முறை தாக்குதல்களுக்கு உள்ளானது. பல தொடர்ச்சியான தாக்குதல்களைச் சந்தித்தது. வேறு எந்த நாடாக இருந்தாலும், அவற்றால் முற்றிலுமாக அழிந்துபோயிருக்கும். ஆனால், பாரதம் அனைத்து தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டது மட்டுமின்றி, மேலும் வலுவாக மீண்டெழுந்தது. அந்த வகையில், தோல்வியிலிருந்தும் ,வெற்றியை மீட்டெடுக்கும் நாடாக பாரதம் திகழ்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.