எங்கள் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன: மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது: தூத்துக்குடியில் பிரதமர் மோடி!

மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் மாபெரும் வளர்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால், எங்கள் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. இருந்தாலும் தடைகளைத் தாண்டி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை (பிப்ரவரி 28) தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் தளம் உள்பட பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மொத்தத்தில் ரூ.17,300 கோடி அளவுக்கு திட்டங்கள் அடிக்கல் மற்றும் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மேடையில் வீற்றிருக்கும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர் என் இரவி அவர்களே,
என்னுடைய சகாவான சரபானந்த சோனோவால் அவர்களே,
ஸ்ரீபாத் நாயக் அவர்களே, ஷாந்தனு டாகுர் அவர்களே, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்களே, மாநில அரசின் அமைச்சர் அவர்களே, இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே, ஆன்றோர்களே,
தாய்மார்களே, பெரியோர்களே,
வணக்கம்!!

இன்று தமிழ்நாடு தூத்துக்குடியிலே வளர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. பல திட்டங்கள் தொடங்கப்படுகின்றன அல்லது அடிக்கல் நாட்டுவிழாவைக் கொண்டாடுகின்றன. இந்தத் திட்டங்கள் தாம், முன்னேற்றமடைந்த இந்திய வரைபடத்தின் முக்கியமானதொரு பகுதியாகும். அனைவருடனும், அனைவருடைய முன்னேற்றம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டும் கூட இவை. இந்த முன்னேற்றங்களில் ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உணர்வை நம்மால் காண முடிகிறது. இந்தத் திட்டங்கள் வேண்டுமானால் தூத்துக்குடியில் இருக்கலாம், ஆனால் இந்தியாவெங்கும் பல இடங்களில் இவை வளர்ச்சிக்கு உந்துதலாக விளங்கும்.

நண்பர்களே, இன்று தேசம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நமது இந்த வளர்ச்சியடைந்த பாரதத்திலே, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிக மகத்துவம் வாய்ந்தது. ஈராண்டுகளுக்கு முன்பாக நான் கோயமுத்தூருக்கு வந்திருந்த போது, சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிக்கும் பொருட்டு பல திட்டங்களைத் தொடக்கி வைத்திருந்தேன். துறைமுகத்தை, கப்பல் போக்குவரத்தின் ஒரு பெரிய மையமாக மாற்றியே தீருவேன் என்று அப்போதே நான் வாக்களித்துச் சென்றேன். இன்று அந்த உத்திரவாதம், இன்று அந்த கேரண்டி நிறைவேறியிருக்கிறது.

வ உ சிதம்பரனார் துறைமுகம், துறைமுகத்திற்கு வெளியேயான சரக்குக் கப்பல் முனையத்திற்காக, வெகுகாலமாகக் காத்திருந்தது, இன்று அதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது.
இந்த ஒரு திட்டத்தில் மட்டும் 7000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது. 900 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களும் கூட, இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர, இன்று பல்வேறு துறைமுகங்களில், கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாய் பெறுமானமுள்ள 13 புதிய திட்டங்களுக்கும் இங்கே அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றன. கடல் வாணிபத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த புத்துயிர் மற்றும் புதுத் தெம்பு காரணமாக, தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான பேர்களுக்கு ஆதாயம் கிடைக்கும், இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு வேலைக்கான புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.

நண்பர்களே, ஹைட்ரோஜன் மூலம் இயங்கும் பாரதத்தின் முதல் மக்கள் பயணப்படகு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. காசியின் கங்கையாற்றின் மீதும் இந்தப் பயணப்படகு, வெகு விரைவிலேயே தனது பயணத்தைத் தொடங்கவிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் காசிவாசிகளுக்கும் இடையிலான உறவுப்பாலத்தைக் காணும் பேறு சில நாட்கள் முன்பாக காசிதமிழ்ச் சங்கமத்தில் என்னால் காண முடிந்தது. அப்படிப்பட்ட என்னுடைய தொகுதியாம் காசிக்கு, தமிழ்நாட்டு மக்கள் அளிக்கவிருக்கும் இந்தக் கலமானது, இது ஒருவகையிலே, காசிவாசிகளுக்கு, தமிழ்நாட்டு மக்கள் அளிக்கும் கொடையாகும். இது இரு மக்களுக்கு இடையேயான அன்பெனும் உறவை பலப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும். வ உ சி துறைமுகத்திலே, உவர்நீரைக் குடிநீராக மாற்றும் ஆலை, பசும் ஹைட்ரோஜன் தயாரிப்பு மற்றும் பங்கரிங், அதாவது எரிபொருள் நிரப்பும் வசதிகளும் இன்று தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்களால், தூத்துக்குடியும் சரி, தமிழ்நாடும் சரி, பசுமை ஆற்றல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான ஒரு மிகப்பெரிய மையமாக மாறும். பாதுகாப்பான எதிர்காலத்திற்கான எந்த மாற்றுக்களின் திசைநோக்கி, இன்று உலகம் பார்க்கிறதோ, அவற்றில் தமிழ்நாடு மிகவும் முன்னேறிய நிலையில் பயணிக்கும்.

நண்பர்களே, உண்மை என்பது எப்போதுமே சற்றுக் கசக்கத்தான் செய்யும். ஆனால் அதன் சத்தியத்தன்மை மட்டும் என்றும் மாறாதது, நிலைத்த நீடித்த நன்மையை அது அளிக்கும். இந்த வேளையிலே நான் யுபிஏ அரசின் மீது ஒரு நேரடிக் குற்றச்சாட்டை முன்வைக்க விரும்புகிறேன் நண்பர்களே. இன்று நிறைவேறியிருக்கும் பல திட்டங்கள் பல தசாப்தங்களாகவே கோரிக்கைகளாகவே மட்டும் இருந்து வந்தன, அவை நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தன. அந்த அரசு மக்கள் நலன், நலத்திட்டங்கள் பற்றி ஏதும் கவலைப்படாத அரசாக இருந்தது. ஆனால் இன்று நாங்கள் உங்களின் எதிர்பார்ப்புக்களை, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்து, உங்கள் கனவுகளை நனவாக்கியிருக்கிறோம்.

நண்பர்களே, கடல்வாணிபத் துறையோடு கூடவே இன்று இங்கே, ரயில் மற்றும் சாலைகளை இணைக்கும் பல வளர்ச்சித் திட்டங்களும் கூட தொடங்கப் பட்டிருக்கின்றன. ரயில்வழிகளின் மின்மயமாக்கலும், இரட்டைவழி ரயில்பாதைக்கான பணிகளும் தென் தமிழ்நாடு மற்றும் கேரளத்திற்கு இடையேயான இணைப்பை மேலும் சிறப்பானதாக ஆக்கும். இதனால் திருநெல்வேலி-நாகர்கோவில் பகுதியின் மீது படியும் தாக்கமும் குறைவாகும். இதைப் போலவே தமிழ்நாட்டின் சாலைவழி கட்டமைப்பை, மேலும் நவீனமானதாக ஆக்க, 4500 கோடி ரூபாய் செலவில், 4 பெரிய திட்டங்களையும் நான் மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன். இவற்றால் மாநிலத்தின் சாலைவழி இணைப்புகள் மேலும் சிறப்பானவையாகும், பயணநேரம் குறைவாகும்; அதோடு கூடவே, சுற்றுலாவுக்கும், தொழில்களுக்கும் ஒரு உந்துசக்தி உண்டாகும். ஒரு சேவகனாக, உங்களின் பிரதம சேவகனாக அர்ப்பணிப்போடு இவற்றை நிறைவேற்றி வருகிறோம்.

நண்பர்களே, ஒருங்கிணைந்த, முழுமையான கண்ணோட்டம் கொண்ட அணுகுமுறையோடு இன்று தேசம் பணியாற்றி வருகிறது. ரயில்வே, நெடுஞ்சாலை, நீர்வழி என பல்வேறு துறைகள் ஈடுபட்டாலும் கூட, மூன்று துறைகளின் நோக்கம் என்னவோ ஒன்று தான் -தமிழ்நாட்டைச் சிறப்பாக இணைப்பது, சிறப்பான வசதிகள் அளிப்பது, தொழில்களுக்குச் சிறப்பான சந்தர்ப்பங்களை உருவாக்குவது, இது தான். ஆகையினாலே தான் கடல்வாணிபத் திட்டங்கள், சாலைவழித் திட்டங்கள், ரயில்பாதைத் திட்டங்கள் என இவையனைத்தும், ஒன்றுபோலத் தொடங்கப்பட்டிருக்கின்றன அல்லது நிறைவடைந்திருக்கின்றன.
பல்முனை இணைப்பு என்ற இந்த அணுகுமுறை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் விரைவைக் கூட்டும். நவீன கட்டமைப்பை நிர்மாணிக்க வேண்டித் தொடங்கப்பட்டிருக்கும் பிரதம மந்திரி கதிசக்தி தேசிய பெருந்திட்டம் காரணமாகவும் கூட, இதற்குப் பேருதவி கிடைக்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தின் பொருட்டும், நான் உங்கள் அனைவருக்கும், மேலும் தமிழ்நாட்டின் என்னுடைய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, தேசத்தின் முக்கியமான கலங்கரை விளக்கங்களை, சுற்றுலா இடங்களாக மேம்படுத்த முடியும் என்று நான் ஒருமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் கூட கூறியிருந்தேன். பல்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் 75 கலங்கரை விளக்கங்களில், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பெரும்பேறு எனக்கு இன்று கிடைத்திருக்கிறது. வரவிருக்கின்ற காலத்திலே, இவை தேசத்தின் பெரிய சுற்றுலா மையங்களாக மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நண்பர்களே, பாரத அரசின் முயற்சியால் நவீன இணைப்புத்திறனில் இன்று தமிழ்நாடு, ஒரு புதிய உயரத்தை எட்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளிலே தமிழ்நாட்டில், 1300 கிலோமீட்டர் நீளம் ரயில் கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. 2000 கிலோமீட்டர் அளவிலான ரயில்வழிகள் மின்மயமாக்கப்பட்டிருக்கின்றன. ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதி-பாதுகாப்பிற்காக, பல நூற்றுக்கணக்கான மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ரயில் நிலையங்கள், நவீன வசதிகளால் இழைக்கப்பட்டிருக்கின்றன. உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தைப் பெற்றிட, இன்று தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சாலை கட்டமைப்பிலும் கூட பாரத அரசு தமிழ்நாட்டிலே கிட்டத்தட்ட ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைச் செய்து வருகின்றது. இதன் விளைவாகத் தான் கடந்த பத்தாண்டுகளிலே தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் வலைப்பின்னல் வேகமாக அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் சீரிய முயற்சி காரணமாக அதிகரித்து வரும் இந்த இணைப்பு, தமிழ்நாட்டில் வாழ்க்கை வாழ்வதில் சுலபத்தன்மையை அதிகரித்து வருகிறது. நண்பர்களே, இது ஏதோ ஒரு அரசியல்கட்சியின் கொள்கைத் திட்டமோ, தனிமனிதக் கோட்பாடோ கிடையாது. இது வளர்ச்சிக்கான சித்தாந்தம், வளர்ச்சிக் கோட்பாடு. இதையே நாங்கள் முன்னெடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இவற்றையெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் பத்திரிக்கைகள்-ஊடகங்கள் வெளியிடாது, இருட்டடிப்பு செய்து விடும். ஏனென்றால், இங்கே இருக்கும் அரசாங்கம் இவற்றை வெளியிட அவர்களுக்கு அனுமதி அளிக்காது. ஆனாலும் நாங்கள் தடைப்பட மாட்டோம், தங்கிப் போக மாட்டோம், விடாமல் தொடர்ந்து வளர்ச்சிப் பயணத்தில் தமிழ்நாட்டுக்குத் தோள் கொடுப்போம், துணையாய் வருவோம்.

நண்பர்களே, நீர்வழிகள் மற்றும் கடல்வழிவாணிபத் துறையை, பல தசாப்தங்களாகவே நமது தேசம் எதிர்பார்ப்போடு தொடர்ந்து நோக்கி வந்திருக்கிறது. ஆனால், பல எதிர்பார்ப்புக்களைத் தாங்கிக் கொண்டிருந்த இந்தத் துறைகள் தாம், இன்று வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரம் ஆகி வருகின்றன. தமிழ்நாட்டிற்கும், தென்னாட்டிற்கும் இதனால் மிகப்பெரிய ஆதாயம் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டின்வசம் மூன்று பெரிய துறைமுகங்கள் இருக்கின்றன, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் இருக்கின்றன. நமது தென்னாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களின் கரையோரப்பகுதிகளும், எல்லையில்லா சாத்தியக்கூறுகள் நிறைந்தவையாக இருக்கின்றன. கடல்வாணிபத் துறை மற்றும் நீர்வழித் துறை ஆகியவற்றின் மேம்பாடு என்பதற்கான நேரடியான பொருள் என்ன தெரியுமா? தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் வளர்ச்சி. நீங்களே பாருங்கள், கடந்த ஒரு தசாப்தத்திலே மட்டும், வ உ சி துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து, 35 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும், இந்தத் துறைமுகமானது, 38 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டிருக்கிறது. இதன் ஆண்டு வளர்ச்சி வீதம் கூட கிட்டத்தட்ட 11 சதவீதமாக இருந்திருக்கிறது. இதனைப் போன்ற பலன்கள் தாம் இன்று தேசத்தின் பிற பெரிய துறைமுகங்களிலும் கூட காணக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வெற்றிகளின் பின்னணியிலே, பாரத அரசின் சாகர்மாலா போன்ற திட்டங்களின் ஒரு பெரிய பங்களிப்பு அடங்கியிருக்கிறது.

நண்பர்களே, மத்திய அரசின் முயற்சி காரணமாக, கடல்வாணிபம் மற்றும் நீர்வழித் துறைகளில், இன்று பாரதம் பெரும்புகழ் ஈட்டி வருகிறது. கடந்த பத்தாண்டுகளிலே, ஏற்பாட்டியல் செயல்பாட்டுக் குறியீட்டில், பாரதம் பல புள்ளிகள் உயர்ந்து, 38ஆவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. நம்முடைய துறைமுகத் திறன், இந்த ஓர் தசாப்தத்தில் மட்டும் இரண்டு பங்காகியிருக்கிறது. தேசிய நீர்வழிகளில் 8 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாரதத்தில் நீர்வழி உல்லாசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை நான்கு பங்கு அதிகரித்திருக்கிறது.

கப்பல் பயணிகளின் எண்ணிக்கையும் கூட இரண்டு மடங்கு அதிகரித்து விட்டது. இனிவரும் காலங்களில், கடல்வாணிபத் துறையின் இந்த வளர்ச்சி, பல மடங்கு அதிகரிக்க இருக்கிறது, இதனால் பெரிய ஆதாயம் கரையோர மாநிலமான தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் என்பது உறுதி. வரவிருக்கும் காலத்திலே, தமிழ்நாடு, இந்த வளர்ச்சிப் பாதையில் பயணித்து, மேலும் வேகமாக முன்னேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதனால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். மூன்றாவது முறையாக நாம் ஆட்சியமைக்கும் போது, இங்கே வளர்ச்சி என்பது தொடர்கதையாகும் என்ற உத்திரவாதத்தை, காரண்டியை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். இன்று தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற, நாங்கள் எப்போதும் போலவே நிறைவான பலத்தோடு முயற்சி செய்வோம். மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு, இது, மோதி அளிக்கும் உத்திரவாதம், மோதியின் கேரண்டி.

நான் கடந்த இரண்டு நாட்களாகவே தமிழ்நாட்டின் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அனைத்து இடங்களிலும் தமிழ் மக்கள் எனக்கு அளித்துவரும் அன்பு, ஆதரவு, பாசம் ஆகியவை என் மனத்தைத் தொடுகின்றன. உங்களின் உற்சாகம், உங்களுடைய ஊக்கம் ஆகியவை என்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. ஒன்றை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் சகோதர சகோதரிகளே, நீங்கள் காட்டும் இந்த அன்பு, நீங்கள் பொழியும் இந்த பாசம், நீங்கள் அளிக்கும் இந்த நல்லாசிகள் – இவையனைத்தையும் நான் பலபங்காக்கி உங்களுக்கே திருப்பித் தருவேன் என்பதை மட்டும் இந்த வேளையிலே நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை, பலப்பல நல்வாழ்த்துக்கள்!! நன்றி!!

பிரதமர் உரை
– நன்றி : அகில இந்திய வானொலி நிலையம், சென்னை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top