மேற்கு வங்கத்தில் ஹூக்ளி நதியில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை இன்று (மார்ச் 6) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
மேற்குவங்க மாநிலம் ,கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியான 16.5 கி.மீ தூரத்திலான ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே, ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை ஆகும்.
இதன் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் பலரும் இந்த மெட்ரோவில் பயணித்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடியும் பள்ளி மாணவர்கள் இடையே அமர்ந்து உரையாடியபடியே சென்றனர்.
இந்த புதிய திட்டத்திற்கு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் தங்களது நன்றியை பிரதமர் மோடிக்கு தெரிவித்தனர். மெட்ரோ மூலமாக விரைந்து செல்ல முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.