மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான ஷேக் ஷாஜகானை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவரின் உதவியாளர்கள் சந்தேஷ்காலி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இவர்கள் மீது ஊழல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக உள்ளது. ஆனால் ஆளும் கட்சி என்பதால் முதல்வர் மம்தா பானர்ஜி குற்றவாளிகளை பாதுகாத்து வந்தார்.
இதையடுத்து, ஷேக் ஷாஜகானை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு ஆதரவாக பாஜக போராட்டத்தில் இறங்கியது.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, போலீசாரால் இந்த வழக்கில் தொடர்புடைய ஷேக் ஷாஜகானின் உதவியாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். 55 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரை பஷீர்ஹத் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். அவரை, 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகானை நேற்று(மார்ச் 06) மாலைக்குள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும்படி மேற்கு வங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை அடுத்து மேற்கு வங்க காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, ஷேக் ஷாஜகானை சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் கஸ்டடிக்கு, சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் அழைத்து சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.