போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் கூட்டாளிகள் புதுச்சேரியில் அரசியல் கட்சியுடன் தொடர்புடையோராக இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து இரும்பு கரம் கொண்டு அடக்க சொல்லியுள்ளோம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி ராஜ்நிவாஸில் காவல்துறை உயர் அதிகாரிகள் அவசர ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தையின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமிக்கு நியாயம், நீதி கிடைக்க மிக தீவிரமாக இருக்கிறோம். சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் ஒரு பகுதி அமைக்கப்பட்டு ,காவல்துறை அதிகாரி கலைவாணன் நியமிக்கப்பட்டு விசாரணையைத் துவக்கியுள்ளோம்.
இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவும், புகார் வந்தால் தீவிரமாக நடவடிக்கை எடுக்கவும், போதைப்பொருட்களை தீவிரமாக கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன். விரைவு நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை செய்து குற்றம் முழுமையாக நிருபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை தர நடவடிக்கை எடுப்போம். துறை ரீதியாக சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் சொல்லியுள்ளேன்.
முத்தியால்பேட்டை பகுதியில் சமூக விரோத செயல்பாடுகள் அதிகளவில் உள்ளதாக தெரிவித்தனர். குழந்தை கொலையில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர். மேலும் பலருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் புதுச்சேரி பெண்களில் ஒருவராக நிற்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், பெண் குழந்தைகள் சுதந்திரமாக நடமாடவும் ஏற்ற சூழலை ஏற்படுத்துவோம்.
டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பியுள்ளோம். தடயங்கள் கிடைத்தாலும் சட்டரீதியாக சில ஆதாரங்கள் கிடைத்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். விரைவுப்படுத்துவோம். விரைவு நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்கும்.
போதைப்பொருள் விஷயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக்-கின் கூட்டாளிகள், புதுச்சேரியில் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து இரும்புக் கரம் கொண்டு அடக்க சொல்லியுள்ளோம்.
புதுச்சேரியில் உள்ள சில பிரச்சினைகளுக்கு தமிழகத்துடன் தொடர்பு உள்ளது. தமிழக போதைப்பொருள் ஆசாமிகளுக்கு தொடர்புடையோர் இங்குள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பந்த் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல. இதில் அரசியல் ஆதாயம் தேடி ஆர்ப்பாட்டம் செய்வது சரியா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.