திருநெல்வேலி ஜங்ஷன் அருகே கருப்பந்துறையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அழியாபதீஸ்வரர் கோவில் உள்ளது. கோரக்கச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவில் முன் தாமிரபரணி ஆற்றின் அருகே 70 சென்ட் நிலத்தில் நந்தவனம் இருந்தது. கருப்பந்துறை ஊராட்சித் தலைவராக இருந்த எல்.தர்மராஜ் என்ற கிறிஸ்துவர் நந்தவன நிலத்தை ஆக்கிரமித்து 20 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளை நடத்தி வந்தார்.
அந்த நிலத்தை மீட்பதற்காக ஹிந்து முன்னணியினர் பல ஆண்டுகளாக போராடியும் தீர்வு ஏற்படவில்லை. கோவிலின் நில ஆவணங்களுடன் ஹிந்து முன்னணியினர் அண்மையில் அறநிலையத்துறையில் புகார் செய்தனர்.
இதனை தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் ராம்குமார் தலைமையில், அறநிலையத்துறையினர் கோவில் நிலத்தை மீட்டு வேலி அமைத்தனர். அதன் பிறகும், தர்மராஜ் தலைமையில் ஒரு கும்பல் வேலியை அகற்ற கட்டடம் கட்டத் துவங்கியது. இதனால் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஹிந்து அமைப்பினர் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து ஹிந்து முன்னணியினர் புகார் அளித்ததை தொடர்ந்து தர்மராஜ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 12) ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவின்படி, உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் 39 சென்ட் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டது; அதன் மதிப்பு, 2 கோடி ரூபாய்.
கோவில் நிலத்தை 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த தர்மராஜ் மீது அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடர வேண்டும் என பொதுமக்களும், ஹிந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளது.