திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஆண்டுக்கு 2.50 லட்சம் ‘வந்தே பாரத்’ ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும், என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் (மார்ச் 14) அவர் அளித்த பேட்டி:
வந்தே பாரத் ரயில் வெற்றிகரமானது. இதைத் தொடர்ந்து அதன் சக்கரங்களை, நமது நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கும்மிடிப்பூண்டியில் ஆண்டுக்கு 2.50 லட்சம் வந்தே பாரத் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் திறனில் தொழிற்சாலை அமைக்கப்படும்.
அதில் 80,000 உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படும்; மீதி உள்ளவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் வாயிலாக ரயில் சக்கரத்தை இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்.
ஆலை கட்டுமானப் பணியை விரைவில் துவக்கி 16 – 18 மாதங்களுக்குள் உற்பத்தி துவக்கப்படும். சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில், ‘ஸ்டாண்டர்டு கேஜ்’ வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பை இன்று துவக்குகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தகவல் தொடர்பு சாதனங்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. சில நாடுகள் மட்டுமே செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதை நம் நாட்டில் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி, மூன்று செமி கண்டக்டர் ஆலைகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டியுள்ளார்.
செமிகண்டக்டர் துறைக்கு வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ள நிலையில் வரும் ஆண்டுகளில் அவை முழு வடிவம் பெறும். இதனால் நாட்டில் உள்ள மொபைல் போன், கம்ப்யூட்டர், விண்வெளி, மோட்டார் வாகனம் என, அனைத்து தொழில் துறைகளும் பயன்பெறும்.
இந்தியா ‘5ஜி’ தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுடன் சமமான நிலையில் உள்ளது. ‘6ஜி’ தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்தும்.
செமிகண்டக்டர் உற்பத்திக்கு எந்த மாநிலம் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி வழங்கப்படும். தற்போது எட்டு மாநிலங்கள் முன்வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பழைய ரயில்களை சரியாக பராமரிக்காமல் விட்டனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின்னர் வந்தே பாரத், நமோ ரயில்கள் என வளர்ந்த நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் ரயில்வே துறை கட்டமைக்கப்பட்டுள்ளது. வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து துறைகளும் வெளிநாடுகளை விட சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.