மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பவர்கள் குறித்து, பொது மக்கள் புகார் அளிக்க வசதியாக, வருமான வரித்துறை சார்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
18-வது மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறையால் பிரத்யேகமாக 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது குறித்த புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டணம் இல்லா தொலைப்பேசி எண், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800 425 6669, மின்னஞ்சல் tn.electioncomplaints2024@incometax.gov.in, வாட்ஸ்அப் எண் 94453 94453 ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
தகவல் சொல்பவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.