சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு, இந்தியாவில் குடியேறுவதற்கும், வசிப்பதற்கும் அடிப்படை உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க நீதித்துறை தனிப் பிரிவை உருவாக்க முடியாது என்றும், இது நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகத்தின் கொள்கை முடிவுகளில் நுழைவதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் இங்கு வாழ்வதற்கான உரிமையையும், சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும். ஆனால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை கோருவதற்கான உரிமை இல்லை. இந்த உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்கும், அகதிகளுக்கான அடையாள அட்டைகளை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இத்தகைய அட்டைகள் சில ரோஹிங்கியா முஸ்லீம்களால் தங்களுக்கு அகதி அந்தஸ்து கோருவதற்கான அடிப்படையாக பயன்படுத்தப்படுகின்றன.
அண்டை நாட்டிலிருந்து பெரிய அளவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுடன் இந்தியா ஏற்கனவே போராடி வருகிறது. அதுமட்டுமில்லாது, இவற்றால் பாதுகாப்பு சீர்கேடு ஏற்படும். தொடர்ந்து, ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுவதும், அவர்கள் இந்தியாவில் தங்குவதும் முற்றிலும் சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளது.