பூடான் சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருது வழங்கப்பட்டது.
இரு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று (மார்ச் 22) பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் வந்தடைந்தபோது பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை சிவப்பு கம்பள மரியாதை அளித்து ராணுவ அணிவகுப்புடன் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பள்ளி சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் இந்தியா, பூடான் தேசிய கொடிகளை அசைத்தபடி உற்சாகமுடன் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திம்புவில் உள்ள தாஷிச்சோ ட்சாங் அரண்மனையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். முன்னதாக அங்கு நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பூடான் அரசர் 4-வது ட்ருக் கியால்போ பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருதை அளித்தார்.
இந்தியா-பூடான் உறவின் வளர்ச்சியில் பிரதமர் மோடியின் சிறந்த பங்களிப்பிற்காகவும், பூடான் தேசத்திற்கும், மக்களுக்கும் அவர் செய்த சிறப்பான சேவைக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், பூடான் மக்களுக்கு, குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு, மறக்க முடியாத வரவேற்பு அளித்ததற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வழி முழுவதும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களின் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன்.
திம்புவில் உள்ள கம்பீரமான தாஷிச்சோட்ஜோங் அரண்மனையில் கிடைத்த வரவேற்பு மற்றும் பாரம்பரிய சிப்ட்ரல் ஊர்வலம் பூடானின் வளமான கலாச்சாரத்தின் ஒரு காட்சியாக விளங்குகிறது.
பூடான் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான வகையில் இருந்தது. இந்தியா-பூடான் நட்புறவை மதிப்பாய்வு செய்தோம். இரு தரப்பு உறவு, கலாச்சார இணைப்புகளை மேலும் வலிமைப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா- பூடான் உறவுகளுக்கு வலு சேர்க்கும்.
பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். பூடான் வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.