சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக, பாமக ஆகிய கட்சிகள் எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என பேசினார். அண்மைக் காலமாக பாமக, திமுகவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் திருமாவளவனின் இந்த பேச்சுக்கு திமுகவுக்கு விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது. மேலும் பாஜகவை ஒரு இடத்தில் கூட கொடியேற்ற விட மாட்டோம் எனவும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரி விசிகதான் எனவும் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். எங்களுடன் பாஜகாவால் மோத முடியுமா எனவும் சவால் விடுத்தார்.
இந்நிலையில் திருமாவளவனின் சவாலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதிர் வினையாற்றியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திருமா.வின் கூட்டத்தில் மக்கள் யாரையெல்லாம் புறக்கணித்துள்ளார்களோ, அவர்களெல்லாம் மேடையில் அமர்ந்திருந்ததாக தெரிவித்தார். கே.பாலகிருஷ்ணன், துரை வைகோ போன்ற சந்தையில் விலைபோகாதவர்களின் பேச்சை கேட்பவர்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள் எனவும் கூறினார்.
திருமாவளவனுக்கு திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டுமென்ற எண்ணம் வந்து விட்டதாக தெரிவித்த அவர், அதற்காக அவர் ஏன் பாஜகவை திட்டுகிறார் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் இது பாஜகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் நடக்கும் யுத்தம் அல்ல என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், பாஜக பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமிக்கும் நடக்கும் யுத்தம் எனக் கூறினார்.
திருமாவளவன், தடா.பெரியசாமி என்ற ஒருவருடன் மோதி ஜெயிக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதாகவும் அதற்காகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சனையை சொல்லி திமுக கூட்டணிக்கு எதிராக பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
நான் உள்ள கூட்டணியில் ஆப்பிள் இருக்க கூடாது, ஆரஞ்சு இருக்க கூடாது, மாதுளை இருக்க கூடாது என்று திருமா பேசுவதாக கிண்டல் செய்த அவர், திமுக உங்களை மதிக்கவில்லை, சமூக நீதிக்கு எதிராக பேசுகிறார்கள் என்றால் கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள் எனவும் கூறினார்.
இன்று பட்டியலின மக்கள் அலைஅலையாய் பாஜகவில் இணைவதாக தெரிவித்த அவர், தடா.பெரியசாமி, வி.பி துரைசாமி போன்ற முக்கிய தலைவர்கள் எல்லாம் பாஜகவில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் சுதந்திர இந்தியா வரலாற்றில் முதன்முறையாக 70 ஆண்டுகள் கழித்து அருந்ததியர் சமுதாயத்தில் இருந்து எல்.முருகனை அமைச்சராக்கியது பாஜக தான் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகள் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மூன்றாவது அணி என்பது டயர் பஞ்சரான வண்டி எனத் தெரிவித்தார். அந்த வண்டியை நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் சில நாட்கள் ஓட்டியதாகவும் எனினும் அவர்கள் தோற்று விட்டதாகவும் தெரிவித்தார். தற்போது அந்த வண்டியை ஸ்டாலின் ஓட்ட முயற்சிப்பதாக தெரிவித்த அவர் அவருக்கு தனது வாழ்த்துக்களையும் கூறினார்.
எனினும் அந்த கூட்டணி தங்களது தலைவர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் தள்ளாடுவதாக தெரிவித்த அவர், அந்த கூட்டம் ஆட்டு மந்தை கூட்டம் போல் உள்ளதாக விமர்சித்த். தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் இயங்கும் சிங்க கூட்டணி எனவும் கூறினார்.