கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கடந்த பிப்.8ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக விடுப்பில் வந்த ராணுவ வீரர் பிரபுவை, திமுக நிர்வாகி சின்னசாமி என்பவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திமுகவினருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ராணுவ வீரரை அடித்து கொலை செய்ததை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டிய தமிழ்நாடு காவல்துறையை கண்டித்தும் பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ராணுவ வீரரின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்ததோடு, அவரது குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்பதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று ராணுவ வீரர் வீட்டுக்கு நேரில் சென்ற அண்ணாமலை, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன்,ராணுவ வீரரின் மனைவியிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்பதாக உறுதியளித்தார். அவருடன் கே.பி ராமலிங்கம், கே.எஸ் நரேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்