ஒரு வங்கி ஊழியரின் நேரடி பார்வையில் விளைந்த பொருளாதார சிந்தனையாகவே இது எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.. நண்பர்களே .. வணக்கம்.
இந்திய அரசின் தலைமைச் பொறுப்பில் இதுவரை இருந்த பிரதமர்களை தாண்டி உலகம் முழுவதும் ஒரு ஒப்பற்ற புகழை தானும் பெற்று, இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த ஒரே பிரதமர் நரேந்திர மோடி என்பதை நாம் அறிவோம் . அவரது ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட டிமானிடேசன் நேரத்தில் அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற வகையில் , அந்த நோக்கம் முழுமை பெறுவதற்காக முழு முயற்சி எடுத்தார் என்று சொன்னால் மிகையில்லை.
அந்த நேரத்தில் வங்கிகளுக்கு மத்திய அரசுகளால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.. அந்த உத்தரவுகளின் மூலம் மேலும் சாதாரண மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உடனடியாக வங்கி கணக்குகள் துவக்கப்பட்டன. அப்படி
துவக்கப்படுகின்ற பொழுது அந்த கணக்குகள் குறைந்தபட்ச தொகை எதுவும் இன்றி துவங்கி கொடுக்கப்பட்டது. இதற்கு பெயர் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதாகும் . இதற்கு காசோலை வசதி கிடையாது. குறைந்த பட்சம் மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் மட்டுமே எடுக்க இயலும்.
இயல்பாக ஒருவர் வங்கி கணக்கு துவக்க வேண்டும் என்று சொன்னால் அவர் வங்கிக்கு செல்லுகின்ற பொழுது , மூன்று புகைப்படங்களை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு ஜாமீன்தாரரின் கையெழுத்து பெற்று செல்ல வேண்டும் . அவரும் அந்த வங்கியில் கணக்கு உள்ளவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச தொகையாக ரூ.500 முதல் ரூ.1000 வரை வங்கி என்ன நிர்ணயித்திருக்கிறதோ அந்த தொகையை செலுத்த வேண்டும்.
இப்படி இருப்பவர் பற்றிய முழு விவரமும் அந்த கிளையின் மேலாளருக்கு தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளில் தான் முன்பெல்லாம் வங்கிகளில் கணக்குகள் துவக்கப்பட்டன. இது தனியார் வங்கிகளில் உடனடி சாத்தியமாக இருந்தாலும் கூட அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இது உடனடி பெரிய நிலையை எட்டி விடவில்லை . ஆனால் மோடி பிரதமர் ஆனதற்கு பின்னர் விடுக்கப்பட்ட அரசு ஆணையின் படி வங்கி அதிகாரிகள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தனர்.
நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 கணக்குகளை தினம்தோறும் ஒவ்வொரு கிளையும் காட்ட வேண்டும். அதாவது டார்கெட் நிறைவேற்ற வேண்டும் என்கின்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன்படி வங்கி ஊழியர்கள் தொடங்கி , வங்கி அதிகாரிகள் வரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கணக்கு துவக்கும் நிலையை உருவாக்கினார். அப்படி உருவாக்கிய போது பலருக்கு கணக்குகள் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பலர் அதன் மூலம் பல விதமான நன்மைகள் அடைந்தார்கள். உதாரணமாக வங்கிகளால் துவங்கப்பட்ட இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டில், அரசுகள் வழங்கக்கூடிய மானியம், இலவசங்கள், மற்றும் ஓய்வூதியங்கள்,
தினக்கூலி ஊதியம் போன்றவை செலுத்தப்பட்டன
இதனால் மக்களுக்கு அலைச்சல் குறைவாக இருந்தது. இடைத்தரக தரகர்கள் இல்லாமல் ,உரிய தொகை அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டது. அது மட்டுமல்ல டிமானிடிசேக்ஷன் நேரத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுகள் இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் அவர்களது முதலாளிகளால் வரவு வைக்கப்பட்டது. இதனால் சாதாரண ஏழை மக்களின் கணக்குகள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான ரூபாய்களை பெறுகின்ற சூழலும் ஏற்பட்டது. போட்ட பணத்தை எடுக்கலாம் என அந்த முதலாளிகள் எண்ணிய போது, பத்தாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டால் முதலாளிகள் திணறினர் . இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகள் பல இடங்களில், குறிப்பிட்ட காலம் வரை பணம் தேங்கியது. இதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டி தொகை சம்பந்தப்பட்ட ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுக்கு கிடைத்தது .
ஆனால் முதலாளிகளுக்கு அசல் மட்டுமே திரும்ப கிடைத்தது. இங்கேதான் இந்திய தேசத்தின் பொருளாதாரம் நிலை நிறுத்தப்பட்டது. செல்வந்தர்களின் பணம் மறைமுகமாக வங்கி கணக்குகளுக்கு இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் மூலம் வந்து சேர்ந்தது. கணக்கு திறப்பதற்கான குறைந்தபட்ச தொகை கூட கட்ட முடியாத பல கணக்குகளில் லட்சக்கணக்கான ரூபாய்கள் புரளுவதற்கு காரணமாக அமைந்தது அந்த நிகழ்வு என்று கூட கருதலாம். எனவே பொருளாதார மேம்பாடு என்பது ஏதோ ஒரே நேரத்தில் ஒரே நாளில் நடைபெறுவது அல்ல. அது பற்றி பல்வேறு நிலைகளில் யோசிக்கின்ற ஒரு மத்திய அரசால் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கு இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகள் தான் சிறந்த உதாரணம்
கட்டுரையாளர்; ஆர்.எஸ் கண்ணன், புதுச்சேரி
நன்றி ஜி