தமிழ்நாடு மற்றும் குஜராத்தின் செளராஷ்ட்ரா இடையேயான உறவுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் செளராஷ்ட்ரா- தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்.17 முதல் 26 வரை நடைபெறும் செளராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தில், மூவாயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். குஜராத்தின் சோம்நாத், துவாரகா, ராஜ்கோட், ஏக்தா நகர் ஆகிய பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. குஜராத் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையேயான பாரம்பரிய உறவுகளை நினைவுபடுத்தும் வகையிலான கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மதுரையிலிருந்து 280 பேர் 4 நாட்கள் பயணமாக குஜராத் புறப்பட்டனர். அவர்களை பாஜகவினர் வழியனுப்பி வைத்தனர்.
மதுரையிலிருந்து புறப்பட்ட ரயில் இரவு 1 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது ஆளுநர் ஆர்.என் ரவி, மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களை வரவேற்றனர். அவர்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடிய பின்னர் வாழ்த்து வழியனுப்பி வைத்தனர்.
மதுரையிலிருந்து புறப்பட்ட ரயில் வரும் 17ம் தேதி குஜராத்தை சென்றடைய உள்ளது. ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனிடையே செளராஷ்ட்ரா- தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தனக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேர்மறையான சூழலை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தும் என கூறினார்.