வேலூர் ஆவின் பண்ணையில், ஒரே பதிவெண் உடைய இரு வேன்கள் இயக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு, 2,500 லிட்டர் வீதம், ஆண்டிற்கு 9 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வேலுார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பண்ணையில், விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு, 1.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் பாக்கெட்டுகள், 600 முகவர்களுக்கு, 20 ஒப்பந்த வாகனங்களில் அனுப்பப்பட்டு, வினியோகம் நடக்கிறது.
வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும், தினசரி, 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை நடக்கிறது. மீதமுள்ள பால் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், ஆற்காடு அருகே திமிரி வழித்தடத்திற்கு கொண்டு செல்லப்படும் பால் வண்டியில், பால் திருட்டு நடந்தது தெரிய வந்தது.
அதைக் கண்டுபிடித்த ஆவின் பொறியியல் பிரிவு மேலாளர் கனகராஜ் தாக்கப்பட்டது தொடர்பாக, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு உள்ளது.
தொடர்ந்து நடந்த பால் திருட்டை அதிகாரிகள் கண்காணித்ததில், ஒரே பதிவெண்ணில் இரண்டு வேன்களை இயக்கி, அதில் தினமும், 2,500 லிட்டர் பால் திருடியது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வேலுார் ஆவினிலிருந்து திமிரிக்கு இயக்கப்படும் வாகனங்களை, நேற்று முன்தினம் மாலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், ‘டிஎன் 23 ஏசி 1352’ என்ற ஒரே பதிவெண்ணில் இரண்டு வேன்கள் இருந்ததும், அதில், 2,500 லிட்டர் பாக்கெட்டுகள் பால் ஏற்றப்பட்டு, வேன் புறப்பட தயார் நிலையில் இருந்ததும் தெரிந்தது.
இதுபோன்ற பால் திருட்டு சில ஆண்டுகளாகவே, தினமும் நடந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இரண்டு வேன் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், சென்னை நந்தனத்திலுள்ள ஆவின் தலைமை அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த வகையில், ஆண்டிற்கு, 9 லட்சம் லிட்டர் பால் வீதம், வேலுார் ஆவினில் இருந்து மட்டும் திருடப்பட்டுள்ளது.
ஆவின் நிர்வாகம் புகார் படி, வேலுார் சத்துவாச்சாரி போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் இந்தத் திருட்டில் திமுக பிரமுகர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று விரைவில் தெரிந்து விடும்.
இந்த விவகாரம் தொடர்பாக, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ”வேலுார் ஆவின் பண்ணையில், பால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை நடக்கிறது.
வரும் நாட்களில், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, ஒப்பந்த வாகனங்களின் ஆவணங்களை முறையாக சரிபார்க்கவும், வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.
ஆவின், அமுல் என்று மல்லுக்கட்டு நடந்து வரும் வேளையில் ஆவினில் பெருமளவு திருட்டு என்பதும் ஏற்கனவே ஆவின் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதும் திராவிட மாடல் அரசுக்கு சோதனை தருவதாகவே உள்ளது!
ஆவினில், பால் பாக்கெட் வினியோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஒப்பந்த வாகனங்களை, தி.மு.க., – அ.தி.மு.க., நிர்வாகிகளே பெரும்பாலும் இயக்கி வருகின்றனர். இவர்கள் கைகோர்த்து, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பண்ணைகளிலும், ஒரே பதிவெண் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, கூட்டுறவு சங்கங்கள், பால் கொள்முதல் விவகாரம் உட்பட பல்வேறு மோசடிகளில் தத்தளித்து நிற்கும் ஆவின், பால் திருட்டு விவகாரத்திலும் சிக்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஆவின் நிர்வாகம் தேறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.