தஞ்சை அம்மாபேட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தாலி கொடியுடன் பெண்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புளியங்குடி மேலத்தோப்பில் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் மற்றும் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஏராளமான பெண்கள் அனைவரும் கையில் தாலிக் கொடியுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கடையை அகற்றவில்லை எனில் தீக்குளிப்போம் என்ற எச்சரிக்கையும் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியதாவது: தஞ்சை அம்மாபேட்டையில் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் டாஸ்மாக் சாராய கடையை அகற்றகோரி தாலி கொடியுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். நானும் டெல்டாகாரன்தான் என பெருமையை£க சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? எங்கே உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
– வ.தங்கவேல்