பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை ஜூலை 28ம் தேதி புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த நடைபயண யாத்திரை தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.
இந்த தொடக்க விழாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித்தலைவர்களுக்கு கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். அதே போன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’என் மண் என் மக்கள்’ நடைபயண தொடக்க விழாவில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் பங்கேற்பு. இராமேஸ்வரத்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தலைமை வகித்துத் தொடங்கி வைக்க இருக்கும் தமிழக பாஜகவின் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களுக்கு, பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் கடந்த 23 ஆம் தேதி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இன்று கடிதம் எழுதியுள்ளார்கள்.
அக்கடிதத்தை, கோவை மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள் அவரது கோவை இல்லத்தில் நேரடியாக சந்தித்து வழங்கினர்.
பாஜக அழைப்பை ஏற்று, இராமேஸ்வரத்தில் நடைபெறும் நடைபயண தொடக்க விழாவில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-வ.தங்கவேல்